நம் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது நம்முடைய வீட்டில் நம்மைச் சார்ந்த இருக்கக்கூடியவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்த சந்தோஷம் என்பது பலருக்கும் கிடைத்திருக்காது. வீட்டிற்குள் வந்தாலே பிரச்சனையாகவே இருக்கும். மேலும் வீட்டில் இருப்பவர்கள் யாரும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாமலும் மீறி பேசினால் சண்டைகள் உண்டாவது போன்ற பிரச்சனைகளும் உண்டாகும். இவை அனைத்திற்கும் அவர்கள் ஒவ்வொருவருடைய கிரக நிலைகள் காரணமாக இருந்தாலும் வீட்டில் ஏதேனும் எதிர்மறை ஆற்றல்கள் தீய சக்திகள் போன்றவை இருப்பதன் மூலமும் இந்த நிலை என்பது உண்டாகும். இந்த எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் தீய சக்திகளை விரட்டியடித்து வீட்டில் நிம்மதி நிலவுவதற்கு செய்ய வேண்டிய விஷ்ணு துர்க்கை வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வீட்டில் நிம்மதி நிலைத்திருக்க
நமக்கு இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள், தீய சக்திகள், கண் திருஷ்டிகள், கோளாறுகள், எதிரிகள் தொல்லை போன்ற அனைத்தும் நீங்க வேண்டும் என்றால் நாம் உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. துர்க்கை அம்மனுக்கு பல வடிவங்கள் இருக்கின்றன. அதிலும் பெருமாளின் அம்சம் பொருந்திய துர்க்கை அம்மனை நாம் விஷ்ணு துர்க்கை என்று அழைக்கிறோம். அப்படிப்பட்ட விஷ்ணு துர்க்கையை எந்த முறையில் வழிபட்டால் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகும் என்றுதான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த பரிகார வழிபாட்டை ஒரே ஒருமுறை செய்தால் போதும் நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களுக்கு எந்த வித வேலையும் இல்லாமல் போய்விடும். இந்த வழிபாட்டை வளர்பிறை அஷ்டமி தினத்தில் செய்தாலும் இந்த வழிபாட்டிற்குரிய அனைத்து பொருட்களையும் நாம் முதல் நாளான சப்தமி திதி அன்றே வாங்க வேண்டும். வளர்பிறை சப்தமி திதி வரக்கூடிய நாளில் நான்கு பொருட்களை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும். இந்த நான்கு பொருட்களையும் நான்கு கடைகளில் வாங்க வேண்டும். அதை மட்டும் நாம் சரியாக செய்து விட்டோம் என்றால் போதும்.
முதலில் நாம் வாங்க வேண்டியது தேங்காய். இந்த தேங்காய் வாங்க கூடிய கடையானது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். ஒரே ஒரு தேங்காயை மட்டும் அந்தக் கடையில் வாங்குங்கள். வேறு எதுவும் வாங்கக்கூடாது. அடுத்ததாக தெற்கு பார்த்து இருக்கக்கூடிய கடைக்கு சென்று 25 ரூபாய்க்கு வெற்றிலை வாங்க வேண்டும். அடுத்ததாக கிழக்கு பார்த்த கடைக்கு சென்று அங்கு பச்சைப்பயிறு மூன்று கிலோ வாங்க வேண்டும். அடுத்ததாக மேற்கு பார்த்த கடைக்கு சென்று விளக்கெண்ணெய் அதாவது ஆமணக்கு எண்ணெய் மூன்று லிட்டர் வாங்க வேண்டும். இவை அனைத்தையும் வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
மறுநாள் வளர்பிறை அஷ்டமி அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய விஷ்ணு துர்க்கை ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு விஷ்ணு துர்க்கையின் பாதத்தில் வெற்றிலை மற்றும் தேங்காயை வைத்து உங்களின் பெயரிலும் உங்கள் குடும்பத்தாரின் பெயரிலும் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். தேங்காயை உடைக்க கூடாது. அர்ச்சனை செய்து வழிப்பாட்டை நிறைவு செய்த பிறகு வாங்கி வைத்திருக்கும் பச்சைபயிரையும் எண்ணெயையும் விஷ்ணு துர்க்கைக்கு அர்ச்சனை செய்த அர்ச்சகர் இடம் தானமாக தர வேண்டும். பிறகு அம்மனை எட்டு முறை வலம் வந்து அம்மனின் பாதத்தில் இருந்த வெற்றிலை மற்றும் தேங்காயை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரவேண்டும்.
வீட்டிற்கு வந்ததும் மஞ்சள் நிற துணியில் இதை வைத்து மூட்டையாக கட்டி, வீட்டு நிலை வாசலின் வெளிப்புறத்தில் கட்டிவிட வேண்டும். பிறகு ஓமம் கலந்த சாம்பிராணியை தூபமாக போட்டு வீடு முழுவதும் காட்டிவிட்டு நிலை வாசலில் கட்டி இருக்கும் இந்த தேங்காய்க்கும் காட்ட வேண்டும். இப்படி நாம் ஒரே ஒருமுறை செய்தாலே போதும். நம்முடைய வீட்டிற்குள் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் ஓடிப் போவதோடு மட்டுமல்லாமல் திரும்பவும் நம் வீட்டிற்குள் வரவே வராது.
இதையும் படிக்கலாமே:குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட
வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் விஷ்ணு துர்க்கையை இந்த முறையில் வழிபாடு செய்து நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.