தமிழர்களின் பழமை மற்றும் ஆன்மீக பணி பற்றி கூறிய விவேகானந்தர்

Vivekanandar and tamil people

“கல் தோன்றா மண் தோன்ற காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி” என்று ஒரு சொல்வழக்கு உண்டு. உலகில் மிகப் பழமையான நாகரீகங்களாக “எகிப்திய, சுமேரிய” நாகரீகங்கள் தான் இன்றும் பெரும்பாலான மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்பட்டு வருகிறது. நமது நாட்டின் பெரும்பாலான இந்தியர்களும் அதையே உண்மையென்று நம்பி வருகின்றனர். ஆனால் 125 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையும் ஹிந்து மதத்தின் பெருமையையும் உலகறியச் செய்தவரும், வங்கத்தில் பிறந்த ஆன்மிகச் செம்மலுமான “சுவாமி விவேகானந்தர்” தமிழ் மக்களை பற்றியும் அவர்களது ஆன்மிகப் பங்களிப்பை பற்றியும் அவர் பேசியதை இங்கு காண்போம்.

Swami Vivekananda

“நம் நாட்டவர்களின் சிலர் தங்களின் ஆரிய ரத்தத்தை குறித்து பெருமை கொள்கின்றனர். ஆனால் அறியப்பட்ட நாகரீகங்களில் மிகப்பழமையான “சுமேரிய நாகரிகம்” இந்த தமிழர்களுடையதே. இந்த தமிழர்களின் பழமைக்கு முன்னாள் “ஆரியர்களும்” (இந்தோ- ஐரோப்பிய இனத்தவர்களாக கருதப்படுபவர்கள்) “செமிட்டிக்” (யூத- அரேபிய) இனத்தவர்கள் சிறு குழந்தைகள் போன்றவர்களாவர். இந்த தமிழர்களின் நீதி நெறி கதைகள் தான் “பைபிளுக்கு” மூலம். இந்த தமிழர்களின் பங்களிப்பில்லாமல் இன்றைய ஹிந்து மதம் இல்லை. வடக்கே காட்டுமிராண்டித்தனமான, கொடூர மதக் கொள்கைகளை உடையவர்கள் கையில் சிக்கி வட இந்தியர்கள் துன்பப்பட்ட போது, ஆன்மீக பலம் கொண்ட “விஜயநகர” பேரரசை உண்டாக்கி தென் இந்தியர்களையும் ஹிந்து மதத்தையும் காப்பாற்றினார் துறவி வித்யாரண்யர்.

ஒவ்வொரு முறை இந்தியாவில் பாரம்பரிய மதத்திற்கு பங்கம் ஏற்படும் போதும் இந்த தென்னிந்திய ஆச்சரியர்களே அதை மீட்டெடுத்தனர். ஆகவே இன்றிருக்கும் ஹிந்து மதம் தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்களின் கொடையே. அதிலும் இந்த தமிழர்களின் பிரம்மாண்ட கோவில்கள் இருக்கிறதே அவைகள் பல வீர சைவ மற்றும் வீர வைணவத்தின் பெருமையைக் கூறும். இவர்களின் வைணவ “ஆழ்வார்கள்” சம்பிரதாயம் ஏழையான அதே நேரத்தில் தாழ் குலத்தில் பிறந்த ஒரு தமிழர் ஏற்படுத்தியது.

Swami Vivekananda

அந்த தமிழரும் 12 ஆழ்வார்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறார். ஆன்மீக செல்வம் நிறைந்த தமிழ் பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன. தமிழ் நாட்டில் தோன்றிய ஆன்மிகப் புரட்சியாளர் “ஸ்ரீ ராமானுஜரின்” புகழ் காஷ்மீர் வரை பரவி உள்ளது. இப்படி இந்தியாவிற்கும் ஹிந்து மதத்திற்கும் எண்ணற்ற நன்மைகளை வழங்கிய தமிழர்களுக்கும் பிற தென்னிந்தியர்களுக்கும் ஒட்டு மொத்த பாரதமும் கடன்பட்டுள்ளது”. என தமிழர்களின் ஆன்மிகப் பங்களிப்பை பற்றி சுவாமி விவேகானந்தர் எடுத்துரைத்தார்.