குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

mahalakshmil

பெண்கள் என்றாலே அவர்களுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. ஒரு குடும்பத்தை மகிழ்ச்சியாக வழிநடத்த ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். ஒரு வீட்டில் பாரம்பரியமானது அந்த வீட்டிலுள்ள பெண்ணின் பழக்கவழக்கத்தை வைத்து தான் கூறப்படுகிறது. பெண்கள் இல்லாமல் ஒரு வீடானது முழுமை அடையாது. நம் முன்னோர்கள் அனைத்து முக்கியமான பொறுப்புக்களையும் குடும்பத் தலைவியான பெண்கள் இடத்தில்தான் ஒப்படைப்பார்கள்.  ஆகமொத்தத்தில் நம் வீட்டின் நடமாடும் மஹாலக்ஷ்மியாக போற்றப்படுபவள் பெண் தான். இப்படி பல சிறப்புகளையும் கொண்ட ஒரு பெண்ணானவள் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று சில வரைமுறைகள் உள்ளது. இந்தக் கோட்பாடுகளை பெண்கள் வீட்டில் கடைபிடித்து வந்தால் நம் குடும்பமானது சந்தோஷமாகவும், நம் வீடு கோவிலாகவும் மாறிவிடும்.

ancient women

பெண்கள் காலையில் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அவர்களின் வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகள் மங்களகரமாக இருக்க வேண்டும். எதிர்மறை சொற்களை பேசவே கூடாது. பெண்கள் காலையில் பேசும் பேச்சு மற்றவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் அமைய வேண்டும். இதன்மூலம் நம் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். காலையில் ஆரம்பம் நன்றாக இருந்தால் அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவே முடியும்.

காலை எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு நல்ல ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் வீட்டுப் பெண்கள் அணியும் ஆடை என்றால் அதில் இரவில் போடப்படும் நைட்டி தான் முதலில் வந்து நிற்கிறது. கட்டாயம் புடவை தான் அணிந்து கொள்ள வேண்டும் என்பதில் எந்த அவசியமும் இல்லை. ஆனால் பகல் நேரங்களில் இந்த நைட்டியை தவிர்த்துவிட்டு மற்றவர்கள் முகம் சுழிக்காத அளவிற்கு ஒரு நல்ல ஆடையை அணிந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு என்று ஒரு தனி அழகு உள்ளது அல்லவா. அந்த அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது. குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு தான் அணியும் ஆடை கூட ஒரு முக்கிய காரணம் என்பதை பெண்கள் உணர வேண்டும்.

women

காலையிலும் மாலையிலும் வீட்டில் உள்ள பூஜை அறையில் இறைவனுக்கு விளக்கு ஏற்றி வழிபடுவது நம் இல்லத்திற்கு மிகவும் நல்லது. பெண்கள் இதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

- Advertisement -

பெண்கள் பேசும் பேச்சானது, எதிரில் நிற்பவர்கள் மதிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும். சில சமயங்களில் தீர்க்க முடியாத பிரச்சனைகளை கூட குடும்பத்தலைவிகள் சுலபமாக தீர்த்து விடுவார்கள். அதற்கான திறமை அவளிடம் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட பெண்ணின் வாயிலிருந்து அமங்கலமான பேச்சுக்கள் வெளிவரக் கூடாது. மங்களகரமான வார்த்தைகளுடன், நிதானத்தைக் கடைப்பிடித்து பேசுவது நல்லது.

women

நம் வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பும் பெண்கள் இடத்தில் தான் உள்ளது. வீட்டின் சுத்தத்தோடு சேர்த்து தன் மனதையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் கடமையும் பெண்களுக்கு உண்டு. தன்னலமற்ற மனதையும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையும் கொண்டிருக்கும், பெண் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவு என்பது இருக்காது.

பெண்களின் அழகிற்கு இன்னும் மெருகேற்றுவது அவளின் சிரிப்புதான். வீட்டில் இருக்கும் பெண்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படவேண்டும். அது அந்த வீட்டிற்கு சர்வ லட்சியத்தையும் கொடுத்துவிடும். ஒரு வீட்டில் எவ்வளவுதான் கஷ்டங்கள் இருந்தாலும் அந்த பிரச்சனைகளை பெண்ணானவள் சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வினை அடைய முயற்சி செய்கின்றாரோ அந்த வீட்டில் கஷ்டம் என்பது நிரந்தரமாக தங்கவே தங்காது.

women

வீட்டின் மஹாலக்ஷ்மி என்று கூறப்படும் பெண்ணானவள், அந்த மகாலட்சுமியை அவளது வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்க வேண்டும் என்றால் மேற்கண்ட விஷயங்களை கடைபிடித்தாலே போதும். துரதிர்ஷ்டங்கள் நம் வீட்டை அண்டவே அண்டாது.

இதையும் படிக்கலாமே
பஞ்சகவ்ய விளக்கு எப்படி செய்வது?

இது போன்ற மேலும் பல ஆன்மிக தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.