இந்த கலியுகத்தின் தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். பல முருக ஆலயங்களில் கூட்டம் அலைமோதிக்கொண்டு இருக்கிறது. பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை வழிபாடு செய்து பலவிதமான பலன்களை பெறுகிறார்கள். இருப்பினும் ஒரு சிலருக்கு வைத்த வேண்டுதல் நிறைவேறவில்லை என்ற வருத்தம் இருக்கும். அப்படிப்பட்ட வேண்டுதல் நிறைவேறுவதற்கும் நீண்ட நாட்களாக தடைபட்டிருக்கக்கூடிய காரியங்கள் நடைபெறுவதற்கும் முருகன் ஆலயத்தில் செய்ய வேண்டிய அர்ச்சனையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாக செவ்வாய்க்கிழமையும் உகந்த நட்சத்திரமாக கிருத்திகை நட்சத்திரமும் உகந்த திதியாக சஷ்டி திதியும் இருக்கிறது. இன்றைய காலத்தில் எந்த இடத்தில் எல்லாம் முருகனின் ஆலயம் இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் இந்த மூன்று நாட்களிலும் பக்தர்கள் திரளாக வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபாடு செய்து செல்கிறார்கள். இப்படி அவர்கள் முருகப்பெருமானை வணங்குவதன் மூலம் அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறும் என்றும் ஒரு சிலர் விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்திருக்கிறார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். மிகவும் சூட்சமமான சில வழிமுறைகளை நாம் பின்பற்றும் பொழுது முருகப்பெருமானின் அருளை நம்மால் விரைவிலேயே பெற முடியும்.
எந்த தெய்வத்தை வழிபட்டாலும் எப்படி வழிபட்டாலும் நம்முடைய கர்ம வினைகளை பொறுத்துதான் அந்த வழிபாட்டிற்குரிய பலனை நம்மால் பெற முடியும். குறைவான கர்ம வினைகள் இருக்கும் பொழுது விரைவிலேயே வழிபாட்டின் பலனை பெறுவார்கள். அதிகளவு கர்ம வினைகள் இருக்கும் பட்சத்தில் அந்த கர்ம வினைகள் குறைந்த பிறகே செய்த வழிபாட்டிற்குரிய பலனை பெற முடியும். இருப்பினும் ஒரு சில சூட்சுமங்களை நாம் பின்பற்றும் பொழுது கர்ம வினைகளையும் தாண்டி முருகனின் அருளை நாம் பெற்று விரைவிலேயே நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம். அந்த வகையில் தான் இந்த வழிப்பாடும் திகழ்கிறது.
முதலில் நம்முடைய ஜாதகத்தில் எந்த முருகனின் ஆலயம் உகந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆலயத்தில் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது நமக்கு விரைவிலேயே பலன் கிடைக்கும். அப்படி ஜாதகத்தில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு செல்ல இயலவில்லை என்பவர்கள் அருகில் இருக்கக்கூடிய முருகனின் ஆலயத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம். செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழிபாட்டை செய்யலாம் அல்லது கிருத்திகை, சஷ்டி போன்ற தினங்களில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். முடிந்த அளவிற்கு வாராவாரம் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஆறு வாரங்கள் செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு மூன்று பொருட்கள் வேண்டும். அவை தான் மல்லிகைப்பூ, செவ்வரளி மற்றும் நாணயங்கள். உதிரியாக இருக்கக்கூடிய மல்லிகை பூ மற்றும் செவ்வரளியை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள் அல்லது தனித்தனியாக கூட எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு கைப்பிடி அளவு சில்லறை நாணயங்களையும் சேர்த்து அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய அச்சகரியிடம் இந்த மூன்று பொருட்களையும் கொடுத்து அர்ச்சனை செய்ய சொல்ல வேண்டும். அப்படி கொடுப்பதன் மூலம் அவர்கள் இந்த உதிரிப்பூவையும் அதேசமயம் சில்லறை நாணயங்களையும் பயன்படுத்தி முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வார்கள்.
அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது உங்களுடைய வேண்டுதலை முருகப்பெருமானிடம் முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஒரு சில ஆலயங்களில் அர்ச்சனை செய்த பிறகு அந்த நாணயங்களை திருப்பித் தரும் வழக்கம் என்பது இருக்கும். சில ஆலயங்களில் தரமாட்டார்கள். தந்தால் அதை வாங்கி பத்திரப்படுத்தி வீட்டில் வைத்துக் கொள்ளலாம். தரவில்லை என்றால் அது முருகனுக்கு உரியது என்று முழுமனதோடு முருகனை சரணாகதி அடைந்து வேண்டுதலை முன்வைத்து வழிபாட்டை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஆறு வாரங்கள் இந்த முறையில் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆறாவது வாரம் தங்களால் இயன்ற பிரசாதத்தை நெய்வேத்தியமாக முருகப்பெருமானுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு தர வேண்டும்.
இதையும் படிக்கலாமே: தீய சக்திகளையும் திருஷ்டிகளையும் விரட்டி அடிக்கும் பரிகாரம்
இப்படி ஒரே வேண்டுதலை ஆறு வாரங்கள் முன்வைத்து இந்த முறையில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வழிகளும் வாய்ப்புகளும் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.