இப்பொழுதெல்லாம் அனைவரது வீட்டிலும் காலை உணவு என்றால் அது தோசையாக தான் இருக்கிறது. அவசர அவசரமாக வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கும் வேண்டும் என்றால் உடனே ஒரு தோசை, இரண்டு தோசை சுட்டு சாப்பிட்டு அனைவரும் காலை உணவை முடித்துக் கொள்கின்றனர். ஆனால் தினமும் ஒரே வகையான தோசையை சாப்பிட்டு பலருக்கும் அலுத்துப் போயிருக்கும். எனவே வார இறுதி நாட்களிலாவது இப்படி வித்தியாசமான சுவையில் இருக்கும் தோசையை முயற்சி செய்து பார்க்கலாம். இதன் சுவை அனைவருக்கும் விருப்பமானதாகவே இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். வாருங்கள் இந்த துவரம்பருப்பு தோசையை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், இஞ்சி சிறிய துண்டு – 1, சீரகம் ஒரு ஸ்பூன், வரமிளகாய் – 5, பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் இட்லி அரிசி மற்றும் அரை கப் துவரம் பருப்பை இரண்டு, மூன்று முறை தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவி, சுத்தம் செய்து, மறுபடியும் அதில் தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு மூன்று மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி, அரிசி மற்றும் துவரம் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் இஞ்சி, சீரகம், வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, வேண்டும் என்றால் உடனே தோசை சுட்டு சாப்பிடலாம். அல்லது நான்கு மணி நேரம் கழித்து மாவு நன்றாக புளித்ததும் தோசை சுட்டு சாப்பிடலாம்.
இந்த தோசை மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து வெங்காய தோசை செய்தும் சாப்பிடலாம். இல்லையெனில் தோசை ஊற்றிய பின்னர் அதன்மீது இட்லி பொடி தூவி பொடி தோசை செய்து சாப்பிடலாம். இந்த தோசையுடன் தொட்டுக்கொள்ள தக்காளி, வெங்காய கடையில் அல்லது காரச் சட்னி சேர்த்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இந்த சுவையான கொங்குநாட்டு துவரம்பருப்பு தோசையை நீங்களும் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள். இதனை சுவைத்த பின்னர் மீண்டும் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள்.