பெருமாளுக்கு உரிய மாதமாக திகழக்கூடிய புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பஞ்சமி திதி என்பது மிகவும் விசேஷமான ஒன்று. இந்த பஞ்சமியை யோக பஞ்சமி என்று கூறுவது உண்டு. அப்படிப்பட்ட இந்த பஞ்சமி திதி அன்று பெருமாளின் அவதாரங்கள் ஒன்றான வராக மூர்த்தியின் உருவமைப்பை பெற்ற வாராஹி அம்மனை வழிபாடு செய்வது என்பது மிகவும் விசேஷமான ஒன்று. மேலும் வாராஹி அம்மனுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்ந்து வருகிறது என்பது கூடுதல் விசேஷம் மிகுந்ததாக கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த தினத்தில் வாராகி அம்மனை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
யோக பஞ்சமி வழிபாடு
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பஞ்சமி திதிக்கு ஒவ்வொரு வகையான விசேஷங்கள் இருக்கின்றன. அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பஞ்சமியை யோக பஞ்சமி என்று கூறுவோம். அன்றைய தினத்தில் வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி யோகமான வாழ்க்கையைப் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த யோக பஞ்சமி அன்று வீட்டில் எந்த முறையில் வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரத்தை முதலில் தெரிந்து கொள்வோம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்யலாம், காலை 6:00 மணியில் இருந்து 7 மணிக்குள், 7: 45 முதல் 8 :45 மணி வரை, 10:45 முதல் 11 :45 மணி வரை, ராகுகாலமான 4.30 மணியிலிருந்து 6:00 மணி வரை, மாலை 6 மணியில் இருந்து 7 மணி போன்ற நேரங்களில் உங்களுடைய வசதிக்கேற்ப வாராஹி அம்மனை நீங்கள் வழிபாடு செய்யலாம்.
வாராகி அம்மனுக்கு செம்பருத்தி அல்லது செவ்வரளி மலர்களை பயன்படுத்தி மாலைகள் போட வேண்டும். அடுத்ததாக 21 என்ற எண்ணிக்கையில் ஏலக்காய் அல்லது விரலி மஞ்சள் இவை இரண்டில் ஏதாவது ஒன்றை மாலையாக கட்டி வாராகி அம்மனுக்கு போட வேண்டும். அடுத்ததாக வாராஹி அம்மனுக்கு நெய்வேத்தியமாக கருப்பு உளுந்தினால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும். அடுத்ததாக மிகவும் முக்கியமான ஒன்றாக யோக பஞ்சமி திதி அன்று ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு வெற்றிலையும் பச்சரிசியும் வேண்டும். வெற்றிலையை எடுத்து அரைத்து அதில் இருந்து சாறை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாரில் பச்சரிசியை சேர்த்து மாவிளக்கு போல் தயார் செய்து கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு தாம்பாள தட்டில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த ஒரு மாவிளத்திலேயே ஐந்து திரி போட்டு ஐந்து தீபமாக ஏற்றலாம் அல்லது ஐந்து விளக்குகளை செய்து தீபம் ஏற்றலாம்.
இந்த தீபமானது குறைந்தது 48 நிமிடம் எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீபத்தை ஏற்றி முடித்த பிறகு வாராகி அம்மனுக்குரிய மந்திரத்தை உங்களால் இயன்ற அளவு எத்தனை முறை கூற முடியுமோ அத்தனையும் முறை கூறுங்கள்.
மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மங்கள வராகி நமோ நமஹ
இதையும் படிக்கலாமே:சிக்கல் தீர முருகன் மந்திரம்
யோக பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத யோகத்தை பெறுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.