சிவபெருமானுக்கு சோமன் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அவர் தன்னுடைய ஜடாமுடியில் சந்திரனை சூடி இருக்கிறார் என்பதால்தான். மேலும் சந்திர பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான தோஷங்களுக்கும் தாக்கத்திற்கும் சிவபெருமானை நாம் வழிபாடு செய்யலாம் என்று கூறப்படுகிறது. அதனால் தான் திங்கட்கிழமையில் சிவபெருமானை வழிபாடு செய்வது அதிக அளவில் பலனை தரும் என்றும் கூறப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படும் நிலையில் சோமவாரத்தில் வரக்கூடிய பிரதோஷ நாளை இந்த முறையில் பயன்படுத்த பிரச்சனைகள் தீர்வதோடு யோகமும் அதிர்ஷ்டமும் வந்து சேரும். அந்த வழிமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சோமவார பிரதோஷ வழிபாடு
ஒருவருக்கு யோகமும் அதிர்ஷ்டமும் ஏற்பட வேண்டும் என்றால் அவர் செய்யக்கூடிய செயல்களை சிறப்பாக செய்ய வேண்டும். செய்யக்கூடிய செயல்களை சிறப்பாக செய்ய வேண்டும் என்றால் அவருடைய மனநிலை சரியாக இருக்க வேண்டும். அந்த மனநிலை சரியாக இருப்பதற்கு உதவக் கூடியவராக திகழ்ந்தவர் தான் சந்திர பகவான். சந்திர பகவானை தன்னிடமே வைத்துக் கொண்டு அருள் பாலிக்கக் கூடியவராக திகழ்ந்தவர் தான் சோமேஸ்வரர் என்று கூறக்கூடிய சிவபெருமான். அப்படிப்பட்ட சிவபெருமானுக்குரிய பிரதோஷம் என்பது சோமவாரத்தோடு சேர்ந்து வரும்பொழுது அதற்கு கூடுதல் சிறப்பு உண்டாகும்.
ஜூன் மாதம் 23ஆம் தேதி சோமவாரத்துடன் கூடிய பிரதோஷ நாள் வருகிறது. அன்றைய நாளில் சிவபெருமானின் அருளை பெறுவதற்கும், தீர்க்கமான முடிவை எடுப்பதற்கும், யோகமும், அதிர்ஷ்டமும் நம்மை தேடி வருவதற்கும், இரண்டு பொருட்களை சிவபெருமானுக்காக நாம் வாங்கி கொடுத்தால் போதும். வழிபாடு செய்கிறோமோ இல்லையோ, விரதம் இருக்கிறோமோ இல்லையோ இந்த இரண்டு பொருட்களை மட்டும் முழுமனதோடு சிவபெருமானுக்கு வாங்கி தருவதன் மூலம் அவரின் அருளால் அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்றே கூறலாம்.
இந்த பொருட்களை பிரதோஷ பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பாக வாங்கி கொடுக்க முயற்சி செய்யுங்கள். காலையிலேயே கூட இந்த பொருட்களை நாம் வாங்கித் தரலாம். இதில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக கருதப்படுவது விபூதி. ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ என்று தங்களுடைய வசதிக்கேற்ப சுத்தமான விபூதியை வாங்கி சிவபெருமான் ஆலயத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக தர வேண்டும். அதேபோல் பிரதோஷ நேரத்திலோ அல்லது பிரதோஷ நேரம் முடிந்த பிறகோ வில்வ இலைகளை வாங்கிக் கொடுத்து சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய மனம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும். மேலும் நாம் செய்யக்கூடிய செயல்கள் சிறப்பாக நடைபெறுவதோடு நம்மை தேடி யோகமும் அதிர்ஷ்டமும் வந்து சேரும்.
இதையும் படிக்கலாமே: துன்பங்கள் தூரப் போக தேய்பிறை பிரதோஷ வழிபாடு
அனைத்து தரப்பு மக்களாலும் எளிதில் வாங்கித் தரக்கூடிய இந்த இரண்டு பொருட்களையும் சோமவார பிரதோஷ நாளில் முழு மனதோடு சிவபெருமானுக்கு வாங்கித்தந்து அவரின் அருளால் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.