வெங்காயம் தக்காளி இல்லையா? கவலைய விடுங்க! சட்டுனு 10 நிமிசத்தில இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு சைட் டிஷ் ஆக இந்த குழம்பை வெச்சுக்கோங்க!

poondu

வீட்டில் வெங்காயம் தக்காளி இல்லை என்றாலும் இனி கவலை இல்லை. இட்லி தோசை சப்பாத்தி, சாப்பாட்டிற்கு போட்டு பிசைந்து சாப்பிட கூட இந்த சைடிஸ் மிகவும் சுவையாக இருக்கும். இந்த வித்யாசமான குழம்பை எப்படி செய்வது? என்பதை பற்றி தான் இன்று, நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கொஞ்சம் வித்தியாசமானது. இதன் சுவை நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். இதை குழம்பை நாம் பூண்டை வைத்து செய்யப் போவதால், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஒரு சைட் கூட, சரி வாங்க ரெசிபியை பார்த்திடலாம்.

Garlic(Poondu)

முதலில் 15 லிருந்து 20 பல் பூண்டை தனித் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தோலுரிக்க வேண்டாம். குறிப்பிட்டு சொல்ல போனால் இரண்டு முழு பூண்டுகள் தேவைப்படும். இதை ஒரு சிறிய அம்மியில் போட்டு ஒன்றும் இரண்டுமாக நன்றாக நசுக்கி கொண்டாலும் சரி, அல்லது மிக்சி ஜாரில் போட்டு, ஒரே ஒரு ஓட்டு ஓட்டி கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொண்டாலும் சரி, அது உங்களுடைய இஷ்டம் தான். நமக்கு தேவை இந்த பூண்டு விழுது. இது அப்படியே இருக்கட்டும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் 1 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு – 1/4 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து போட்டு, சிவக்க விட வேண்டும்.

poondu1

சிவந்ததும் பூண்டு விழுதை எண்ணெயில் போட்டு 3 நிமிடங்கள் வரை வதக்கினால், பூண்டு பொன் நிறமாக மாறிவிடும். அப்போது மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன், மல்லித் தூள் – 1 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து 30 வினாடிகள் வதக்கி, உடனடியாக 100ml தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் கொதிக்கட்டும். (மிளகாய்த்தூளை எண்ணெயில் போட்டு சிவக்க வைக்கும்போது கருக விட்டு விடக்கூடாது.)

அடுத்தபடியாக 250 ml அளவு கெட்டித் தயிரை ஒரு கிண்ணத்தில் எடுத்து கட்டியில்லாமல் அடித்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் கடாயில் இருக்கும் குழம்பு நன்றாக கொதி வந்ததும், இந்த தயிரை கடாயில் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, கட்டி படாமல் கலக்கிவிட்டு ஒரு மூடி போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டாலே போதும். சுவையான குழம்பு தயாராகிவிடும். (தயிரை ரொம்பவும் கெட்டியாகவும் ஊற்றக்கூடாது. ரொம்பவும் தண்ணிராகவும் ஊற்றக்கூடாது. மோர்க் குழம்புக்கு ஊற்றுவோம் அல்லவா அந்த பக்குவத்தில் ஊற்ற வேண்டும்.)

curd

தயிரின் சுவை பூண்டு வாசம் சேர்ந்து இந்த குழம்பு தனி ருசியை கொடுக்கும். இதன் அளவு கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். இருப்பினும் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம் சுடச்சுட சாதத்தில், சுடச்சுட இந்த குழம்பை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். ஒருமுறை உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.