ரவை இருக்கா உங்க வீட்டில! 15 நிமிடத்தில் சூப்பரான மொறு மொறு போண்டா தயார்.

rava-bonda
- Advertisement -

மாலை நேரத்தில் டீ குடிக்கும் போது சுட சுட ஏதாவது நொறுக்கு தீனி சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தால், உடனடியாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த போண்டாவை சுலபமாக தயார் செய்துவிடலாம். அதுவும் எந்த கஷ்டமும் இல்லாமல். மாலைநேரத்தில் குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த பிறகு 4 போண்டாவை சாப்பிட கொடுத்தால், உடனடியாக தெம்பாகி விளையாட செல்வார்கள். வாங்க நேரத்தைக் கடத்தாமல் இந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

முதலில் அகலமான ஒரு பாத்திரத்தில் ரவை – 1 கப், தண்ணீர் – 1/2 கப், ஊற்றி நன்றாக கலந்து ஒரு மூடி போட்டு 10 நிமிடம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். ரவை நன்றாக ஊறிய பின்பு உங்கள் கையைக் கொண்டு ஒரு முறை ரவையை பிசைந்துவிடுங்கள். அதிகமாக தண்ணீர் இருக்காது. தண்ணீரை முழுவதும் ரவை உறிஞ்சி இருக்கும். 1 கப் ரவைக்கு, 1/2 கப் அளவு தண்ணீர் சரியாக இருக்கும். உங்களுக்கு ஒரு வேளை நிறைய தண்ணீர் தேங்கி இருந்தால், அந்தத் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட வேண்டும்.

- Advertisement -

ஊறிய இந்த ரவையோடு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1, பச்சை மிளகாய் பொடியாக  நறுக்கியது – 2, இஞ்சித் துருவல் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லித் தழை பொடியாக நறுக்கியது – சிறிதளவு, சீரகம் – 1/2 ஸ்பூன், மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன், ஆப்ப சோடா – 2 சிட்டிகை, தேவையான அளவு உப்பு தூள், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக பிசைய வேண்டும்.

தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். உங்கள் கையை கொண்டு மாவு இளக்கமாக பிசைந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரை மாவில் தெளித்து போண்டா மாவு பதத்திற்கு மாவை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மாவு ரொம்பவும் கட்டியாக இருந்தாலும் போண்டா புசுபுசுவென வராது. ரொம்ப தண்ணீராக மாவை பிசைந்து விட்டாலும் போண்டா எண்ணெய் குடித்து விடும். மாவின் பக்குவம் சரியாக இருக்க வேண்டும்.

- Advertisement -

அவ்வளவு தான். தயார் செய்த போண்டாவை எண்ணெயில் விட்டு எடுக்க வேண்டியது தான். அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெயை மிதமான சூடு ஆன பின்பு சிறிய சிறிய உருண்டைகளாக போண்டா மாவை கையில் எடுத்து, எண்ணெயில் விட்டு போண்டா ஒரு பக்கம் சிவந்ததும், திருப்பிப் போட்டு பொன்னிறமாக சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான ஸ்னாக்ஸ் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும். (அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு போன்றவை பொரித்தெடுங்கள்.)

பின்குறிப்பு: இந்த போண்டாவில் மைதா மாவு சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளலாம். ஆப்ப சோடா சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் புளித்த தயிர் 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி இந்த மாவை பிசைந்து கொண்டாலும் போண்டா பிசுபிசுவென எழும்பி வரும். புளித்த இட்லி மாவு இருந்தாலும் ஒரு குழிகரண்டி இதில் ஊற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -