3 நிமிஷம் போதும் கிரிஸ்பியான நம்ம ஃபேவரட் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் வீட்டிலேயே இப்படி எளிதாக தயார் செய்யலாமே? எதற்கு அதிக விலை கொடுத்து வாங்கணும்?

potato-french-fries
- Advertisement -

வீட்டை விட்டு வெளியில் கிளம்பி சென்றாலே ஆங்காங்கே கடைகளில் சுடச்சுட விற்பனைக்கு இருக்கும் இந்த ஃபேவரட் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களையும் அதிகம் கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கிறது. வெளியில் மொறுமொறுவென்று உள்ளே மெத்தென்று இருக்கக்கூடிய இந்த உருளைக்கிழங்கு வறுவல் டொமேட்டோ சாஸ் வைத்து தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். அனைவரும் விரும்பக் கூடிய இந்த ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்குவதை விட, நம் வீட்டிலேயே எப்படி ஆரோக்கியமான முறையில் தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய உருளைக்கிழங்கு – 2, கான்பிளவர் மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்முறை விளக்கம்:
முதலில் இரண்டு பெரிய உருளைக் கிழங்குகளை தோல் சீவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு வாங்கும் பொழுது மேல் பகுதி பச்சை நிறத்தில் இருந்தால் அதனை வாங்கக்கூடாது, தவிர்த்துவிட வேண்டும். உருளைக்கிழங்கு நல்ல தரமான கெட்டியான தன்மையுடன் இருக்க வேண்டும். தோல் சீவிய உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி பின்னர் பிரெஞ்சு ஃப்ரைஸ் செய்வது போல நீளவாக்கில் கட்ட கட்டமாக பாக்ஸ் போல நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை உப்பு லேசாகத் தூவி எல்லா இடங்களிலும் படும்படி நன்கு பிரட்டி வைத்துக் கொள்ளுங்கள். அரை உப்பு மட்டும் தூவினால் போதுமானது.

பின்னர் ஒரு இட்லி பானையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு தட்டிலும் இருக்கக்கூடிய குழிகளில் எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வொரு குழிகளிலும் நான்கைந்து துண்டுகளை வைத்துக் கொள்ளுங்கள். இட்லி பானையின் அடியில் இட்லிக்கு அவிப்பது போல தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கு எந்த அளவிற்கு இருக்குமோ, அத்தனை தட்டுகளிலும் நிரப்பி மூடி வைத்து சரியாக மூன்று நிமிடம் அதிக தீயில் வைத்து அவித்து எடுத்தால் சரியான பதத்திற்கு வெந்துவிடும். மூன்று நிமிடத்திற்கு மேல் கண்டிப்பாக வேக வைக்க வேண்டாம்.

- Advertisement -

உருளைக்கிழங்கு இப்போது முழுமையாக இல்லாமல் பாதி அளவிற்கு வெந்து போயிருக்கும். இட்லி பானை ஆறியவுடன் அவற்றிலிருந்து எடுத்து தனித்தனியாக ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது காய்கறி நறுக்கும் மரத்தாலான கட்டர் போன்றவற்றின் மீது பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டால் தண்ணீர் இல்லாமல் நன்கு உலர்ந்துவிடும். அதன் பிறகு ஒரு பெரிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சரிசமமான அளவுகளில் ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் கான்பிளவர் மாவு கலந்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் உலர வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மூடி போட்டு நன்கு குலுக்குங்கள். மாவு எல்லா இடங்களிலும் படும்படி மெதுவாக குலுக்க வேண்டும்.

பின்னர் மாவை தட்டிவிட்டு உருளைக்கிழங்கு துண்டுகளை மட்டும் ஒரு ஜிப் லாக் கவரில் போட்டு ப்ரீசரில் வைத்து விடலாம். பின்னர் தேவையான பொழுது எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயை நன்கு காய வைத்து அதிக தீயில் உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு 5 நிமிடம் அதனை எதுவும் செய்யாமல் வேக விட வேண்டும். அதன் பிறகு மெல்ல மெல்ல பொன் நிறமாக மாற ஆரம்பிக்கும். பிறகு கரண்டியை வைத்து பிரட்டி எடுத்தால் மொறுமொறுவென ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் சுலபமாக தயாராகிவிடும். இதை டொமேட்டோ சாஸ் வைத்து தொட்டு சாப்பிட்டால் கடைகளில் கிடைப்பது போலவே அற்புதமான சுவையில் ஆரோக்கியமான பிரெஞ்சு ஃப்ரைஸ் வீட்டிலேயே அனுபவிக்கலாம்.

- Advertisement -