கையேந்தி பவனில் சாப்பிடக்கூடிய குருமா ஒரு சுவை என்றால், ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடக்கூடிய குருமா ஒரு சுவை. நிச்சயமாக இரண்டிற்கும் நமக்கு ஒரு வித்தியாசம் தெரியும். இன்னைக்கு ஸ்டார் ஹோட்டலில் செய்வதுபோல அருமையான சுவையில் ஒரு தக்காளி குருமா ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். இந்த தக்காளி குருமாவை சுலபமாக பத்து நிமிடத்தில் செய்துவிடலாம். இட்லி தோசை சப்பாத்தி குறிப்பாக ஆப்பம் இடியாப்பத்திற்கு இந்த குருமா சூப்பரான சைடிஷ் ஆக இருக்கும். சுட சுட சாதத்தில் கூட இதை போட்டு பிசைந்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இதோ உங்களுக்கான தக்காளி குருமா ரெசிபி.
செய்முறை
இந்த தக்காளி குருமா செய்வதற்கு முதலில் திக்கான 1 கப் அளவு தேங்காய் பால் நமக்கு தேவை. தேங்காயை உடைத்து அதில் 1/2 மூடி அளவு தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து, வடிகட்டி தேங்காய் பால் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் பால் ஊற்றி செய்யும் போது தான் இந்த குருமாவுக்கு ரிச்சான சுவை கிடைக்கும். (கவனம் தேவை. திக்கான தேங்காய் பால்தான் நமக்கு வேண்டும். ஆகவே கூடுதலாக இன்னும் கொஞ்சம் கூடுதலாக தேங்காய் கூட சேர்த்துக் கொள்ளுங்கள்.)
அடுத்தபடியாக அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, நறுக்கிய மீடியம் சைஸில் இருக்கும் வெங்காயம் – 2, நறுக்கிய மீடியம் சைஸில் இருக்கும் தக்காளி பழம் – 2, பச்சை மிளகாய் – 6, தண்ணீர் – 1 கப், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், போட்டு குக்கரை மூடி இரண்டிலிருந்து மூன்று விசில் விட வேண்டும். வெங்காயம் தக்காளியை நம் இஷ்டம் போல வெட்டிக் கொள்ளலாம். ஏனென்றால் வெந்து வந்ததும் இதை மசிக்க தான் போகின்றோம்.
விசில் வந்ததும் பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு ஸ்மேஷர் அல்லது மத்து வைத்து இந்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை லேசாக கடைந்து விடுங்கள். மொழு மொழுவென மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கக் கூடாது. இதில் மிளகாய் தூள் சேர்க்கப்போவதில்லை. காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயை தான் வைத்துக் கொள்ள வேண்டும். கடைந்த இந்த வெங்காயம் தக்காளிக்கு தேவையான அளவு உப்பு போட்டு, 1 கப் அளவு எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி, அடுப்பை பற்ற வைத்து வெறும் 1 நிமிடம் மட்டும் கொதிவிட்டு, அடுப்பை அணைத்து விட வேண்டும். தேங்காய்ப்பால் ஊற்றி இந்த குருமாவை நீண்ட நேரம் கொதிக்க வைத்தால் சுவை இருக்காது.
இப்போது இந்த குருமாவுக்கு ஃபைனல் டச் ஆக ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு – 1/2 ஸ்பூன், பட்டை – 1 சிறிய துண்டு, லவங்கம் – 2, ஏலக்காய் – 2, வரமிளகாய் – 1, இடித்த பூண்டு பல் – 2, நீளவாக்கில் மிகவும் மெல்லிசாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு இந்த பொருட்களை எல்லாம் பொன்னிறமாக வறுத்து இதை அப்படியே குருமாவில் கொட்டி, குருமாவை கலந்து மேலே கொத்தமல்லி தழைகளை தூவி, சுட சுட பரிமாறினால் சூப்பரான வாசம் நிறைந்த குருமா தயார்.
பொதுவாகவே தேங்காய் பால் ஊற்றி செய்யக்கூடிய எல்லா ரெசிபியும் ரிச் ஆன சுவையைக் கொடுக்கும். இந்த குருமாவும் அப்படித்தான் மிக மிக எளிமையான முறையில் வித்தியாசமாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.