தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் செய்யும் இந்த பொங்கல் மிகவும் விசேஷமானது. எல்லா நாட்களிலும் இதை செய்தால் கூட இந்த நாளில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வணங்குவது தான் இந்நாளின் சிறப்பு. இந்த பொங்கலை ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக செய்வார்கள் ஆனால் இந்த சமையல் குறிப்பு பதிவில் பாரம்பரியமான முறையில், புதிதாக சமையல் பழகுபவர்கள் கூட எளிதாக செய்யும் வகையில் எப்படி செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
செய்முறை
இந்தப் பொங்கல் செய்ய பொன்னி பச்சரிசியாக தேர்வு செய்து கொள்ளுங்கள். இது தான் மிகவும் ருசியாக இருக்கும். இந்த அரிசியில் ஒரு டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் பச்சரிசிக்கு அரை டம்ளர் பாசிப்பருப்பு, இரண்டையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பாசிப்பருப்பை மட்டும் அடுப்பை பற்ற வைத்து அதில் பேன் வைத்து லேசாக வறுத்து கொள்ள வேண்டும்.
இப்போது அரிசி, பாசிப்பருப்பு, இரண்டையும் பத்து நிமிடம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரிசியை நன்றாக கலைந்து கழுவி ஊற்றி விடுங்கள். அடுத்து இன்னொரு முறை தண்ணீர் ஊற்றி கழுவி அந்த தண்ணீரை கீழே ஊற்றாமல் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து பொங்கல் பானையை வைத்து விடுங்கள். அதில் இரண்டு டம்ளர் காய்ச்சாத பாலை ஊற்றி கொள்ளுங்கள். (ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் பால் இது தான் கணக்கு) அடுத்ததாக அரிசி கலைந்த தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்து அதையும் அளந்து எடுத்து கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் அரிசிக்கு 5 டம்பளர் தண்ணீர் வைக்க வேண்டும். நாம் அரிசி, பருப்பு எல்லாம் சேர்த்து ஒன்னரை டம்ளர் சேர்த்திருக்கிறோம். நாம் ஏற்கனவே அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து இருப்பதால் 10 டம்ளர் (2 டம்பளர் பால் 8 டம்ளர் தண்ணீர், அரிசி களைந்த தண்ணீருடன் சேர்த்து) ஊற்றினால் சரியாக இருக்கும்.
அரிசி கழுவிய தண்ணீரை சேர்த்து செய்யும் போது பொங்கல் சீக்கிரம் பொங்கி வரும். அது மட்டுமில்லாமல் பொங்கலின் சுவையும், மனமும் சுவையும் கூடுதலாகவே இருக்கும். இப்போது ஊற்றிய தண்ணீர், பால் எல்லாம் நன்றாக கொதித்து ஒரு முறை பொங்கி வந்த பிறகு ஊற வைத்த அரிசியை சேர்த்து வேக விடுங்கள்.
அரிசி குழைய வெந்த பிறகு தான் வெல்லம் சேர்க்க வேண்டும். அரிசி வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் வெல்லத்தை பொடித்து இரண்டரை டம்ளர் வெல்லம் எடுத்து கொள்ளுங்கள். இனிப்பு சுவை சற்று கூடுதலாக இருந்தால் தான் பொங்கல் மிகவும் ருசியாக இருக்கும்.
இப்போது அரிசி நன்றாக குழைய வெந்த பிறகு பொடித்து வைத்த வெல்லத்தை பொங்கலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி வேகும் முன் வெல்லத்தை சேர்த்து விட்டால், அதன் பிறகு அரிசி வேகமால் முழுதாக நின்று விடும். எனவே அரிசி நன்றாக வெந்து குழைந்த பிறகு தான் வெல்லத்தை சேர்க்க வேண்டும். அதே போல் வெல்லம் தரமானதாக இருந்தால் அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு வேலை மண் இருக்கும் என தோன்றினால் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி வடிகட்டிய பிறகு இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பொங்கலில் வெல்லத்தை சேர்த்த பிறகு நான்கு ஏலக்காவை தட்டி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வெல்லம் நன்றாக இளகி குழைந்து வந்த பிறகு நான்கு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். நெய் அதிகமாக தேவை என்றால் இன்னும் கூட கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக ஒரு சின்ன தாளிப்பு கரண்டி வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி 10 முந்திரி பருப்பு 10 திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதையும் பொங்களில் ஊற்றி நன்றாக கிளறி இறக்கி விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: பனிக்காலத்தில் இருமல், சளி, காய்ச்சல் வராமல் இருக்க டீ போடும் பொழுது இந்த 4 பொருளையும் சேர்த்து போட்டு பாருங்க! மனதிற்கும், தொண்டைக்கும் ஆஹாவென்று இதமாக இருக்கும்.
பாரம்பரியமான முறையில் சர்க்கரை பொங்கலை சுலபமாக செய்து விட்டோம். இந்த முறையை வீட்டில் கேஸ் அடுப்பில் பானை வைத்து செய்வதாக இருந்தாலும் செய்யலாம். சிலர் சூரிய பொங்கல் வைப்பார்கள் அந்த முறையில் பொங்கல் வைப்பதாக இருந்தாலும் இதே அளவுகளுடன் பொங்கல் வைத்தால், இந்த பொங்கலில் நீங்க வைக்கிற பொங்கல் தான் மிகவும் சுவையாக இருக்கும்.