இட்லி, தோசை செய்ய மாவு இல்லாத சமயங்களில் என்ன டிபன் செய்வது என்று பெரிய குழப்பமே வந்து விடும். அது போல சமயத்தில் இந்த ஈஸியான தோசையை ரொம்ப சுலபமாக செய்து சாப்பிடுங்கள். அதற்கு சைட் டிஷ் ஆக மதுரை காரச் சட்னியும் அரைத்து வைத்தால் போதும். ஒரு சூப்பரான பிரேக்ஃபாஸ்ட் தயாராகி விடும். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் தோசையும், காரச் சட்னியும் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இன்ஸ்டன்ட் பொரி தோசை செய்முறை விளக்கம்:
ஒரு மிக்ஸி ஜாரில் 2 கப் பொரி, 1 கப் கோதுமை மாவு, 1/2 தயிர், 1/2 டீஸ்பூன், உப்பு 1 டீஸ்பூன் வெல்லம், (வெல்லம் சேர்த்து அரைக்கும் போது தோசை நன்றாக சிவந்து வரும்) இவையெல்லாம் சேர்த்து ஒரு முறை அரைத்த பிறகு 1/2 கப் தண்ணீர் ஊற்றி மறுபடியும் ஒரு முறை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு தோசை மாவின் பதத்தில் இருக்க வேண்டும். எனவே தண்ணீர் போதவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மாவு தயாராகி விட்டது.
மதுரை காரச் சட்னி செய்முறை விளக்கம்:
இந்த சட்னி அரைக்க ஒரு மிக்ஸி ஜாரில் 1 கை அளவிற்கு பூண்டை தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் 10 காய்ந்த மிளகாய், 1 சின்ன நெல்லிக்காய் அளவு புளி, 1 டீஸ்பூன் வெல்லம், 1/2 டீஸ்பூன் உப்பு, சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பை பற்ற வைத்து தாளிப்பு கரண்டியை வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் 1/2 ஸ்பூன் கடுகு,1ஸ்பூன் உளுந்து இரண்டையும் சேர்த்து நன்றாக பொரிந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலை சேர்த்து எண்ணெய் சூடாக இருக்கும் போதே பவுலில் இருக்கும் சட்னியில் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள் மதுரை காரச் சட்னியும் ரெடி.
இப்போது அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை வைத்து கல் நன்றாக சூடான உடன் அரைத்து வைத்த மாவிலிருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து நல்ல மெலிதாக தோசை ஊற்றிக் கொள்ளுங்கள்.
இதை நல்லெண்ணெய் ஊற்றி சுடும் போது மிகவும் அருமையாக இருக்கும். சுடச்சுட தோசையுடன் அரைத்து வைத்த கார சட்னியும் சேர்த்து பரிமாறினால் ஒரு பிரமாதமான டிபன் தயார்.
இந்த சட்னியும் தோசையும் சேர்த்து செய்ய மொத்தமாக பத்து நிமிடம் கூட ஆகாது. இவ்வளவு குறைந்த நேரத்தில் இப்படி ஒரு அருமையான டிபன் ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் பாருங்கள்.