நாம எல்லோருமே இந்த ரிங் முறுக்கை பேக்கரியில் வாங்கி தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் நம்முடைய வீட்டிலேயே மிக மிக எளிமையான முறையில் நம் கையாலேயே இந்த ரிங் முறுக்கு செய்து நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சூப்பரான ருசியில் வரும். பக்குவம் தவறவே தவறாது. பின் சொல்லக் கூடிய குறிப்புகளை சரியான முறையில் பின்பற்றினால். உங்களுடைய வீட்டில் அரிசிமாவும் சமையலுக்கு தேவையான இன்னும் சில அடிப்படையான பொருட்களும் இருந்தால் சுலபமாக நம் கையாலேயே செய்யக்கூடிய இந்த ரெசிபியை தெரிஞ்சு வச்சுக்கோங்க.
செய்முறை
முதலில் இதற்கு நமக்கு 1 கப் அளவு பச்சரிசி மாவு தேவை. வீட்டிலேயே அரைத்த பச்சரிசி மாவாக இருந்தாலும் சரி, கடையில் வாங்கிய பச்சரிசி மாவாக இருந்தாலும் சரி, அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கடையில் வாங்கிய பச்சரிசி மாவாக இருந்தால் அதை ஒரு முறை கடாயில் போட்டு கை பொறுக்கும் சூடு வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் அரைத்த பச்சரிசி மாவாக இருந்தால் சலித்து அதை ஒருமுறை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்த பச்சரிசி மாவில் இந்த ரிங் முறுக்கு செய்தால்தான் மொறுமொறுப்பாக வரும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எந்த கப்பில் பச்சரிசி மாவு எடுத்திங்களோ, அதே கப்பில் 1 கப் அளவு தண்ணீரை அந்த கடாயில் ஊற்றி தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் 2 சிட்டிகை, வர மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், எள்ளு 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கலந்து விட்டு, தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை சிம் செய்துவிட்டு, எடுத்து வைத்திருக்கும் 1 கப் அளவு பச்சரிசி மாவை இந்த தண்ணீரில் கொட்டி கட்டிகள் விழாமல் கைவிடாமல் கலந்து விட வேண்டும்.
மாவு கடகடவென தண்ணீரை உறிஞ்சு கொள்ளும். மாவு கட்டி பதத்திற்கு வரும். எல்லா மாவையும் தண்ணீரில் படும்படி கலந்து விடுங்கள். 1 கப் அளவு அரிசி மாவுக்கு, 1 கப் அளவு தண்ணீர் போதுமானது. அதிகப்படியான தண்ணீர் ஊற்றக்கூடாது. மாவு தண்ணீரையெல்லாம் உறிஞ்சி கட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இது கை பொறுக்கும் சூடு வரட்டும். ஒரு மூடி போட்டு மூடி வையுங்கள். (இந்த மாவு ரொம்பவும் கட்டியாக இருப்பது போல தான் தோன்றும். இருக்கட்டும் பரவாயில்லை. அது அப்படித்தான் இருக்க வேண்டும்.)
ரொம்பவும் மாவை ஆற விடக்கூடாது. உங்கள் கையை தண்ணீரில் நனைத்து இந்த மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து விட வேண்டும். ஓரளவுக்கு மாவு சூடு இருக்கும்போதே இந்த மாவை பிசைய தொடங்குங்கள். சூப்பரான மாவு நமக்கு இப்போது கிடைத்திருக்கும் அல்லவா. இதை இப்போது உருட்டி ரிங் வடிவில் முறுக்கு போல செய்ய வேண்டும்.
இதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளது. பிசைத்து வைத்திருக்கும் மாவிலிருந்து மிகச்சிறிய அளவு மாவை எடுத்து கையாலேயே உருட்டி நீல வாக்கில் வரும்படி செய்து, ரவுண்ட் ரவுண்டாக மடித்து வெட்டி எடுக்கலாம். இது ஒரு முறை.
அப்படி இல்லையென்றால் இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டுக் கொள்ள வேண்டும். தேன்குழல் முறுக்கு அச்சு இருக்கும் அல்லவா. ஒரு ஓட்டை வைத்த முருக்கு அச்சு, அதற்குள்ளே இந்த மாவை போட்டு நீள நீளமாக முறுக்கு புழிவது போல ஒரு தட்டின் மேல் பிழிந்து, அந்த நீளவாக்கில் பிழிந்த முறுக்கை, இப்படி ரவுண்டு வடிவத்தில் ரிங் முறுக்கு போல செய்து எல்லாவற்றையும் ஒரு தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: ஒரே ஒரு விசில் விட்டால் போதும் சூப்பரான காலிஃபிளவர் குருமா ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் என எல்லாவற்றுக்கும் ஏற்ற பக்கா சைடிஷ்.
பிறகு எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் காயவைத்து, தயார் செய்து வைத்திருக்கும் ரிங் முறுக்குகளை அதில் போட்டு பக்குவமாக பொரித்து எடுக்க வேண்டும். முறுக்குகளை எண்ணெயில் போட்ட உடனேயே கரண்டியை வைத்து கலந்து விட்டால் முறுக்கு உடைந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது.
இரண்டு நிமிடம் அந்த முறுக்கு எண்ணெயில் வெந்தவுடன் கரண்டியை வைத்து கலந்து பொன்னிறமாக சிவக்க வைத்து எண்ணெயிலிருந்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மொறுமொறுப்பாக சூப்பரான சுவையில் ஸ்நாக்ஸ் தயாராக கிடைத்திருக்கும். டப்பாவில் போட்டு வைத்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு குழந்தைகள் பிரச்சனை இல்லாமல் ஸ்நாக்ஸ் சாப்பிடுவார்கள். உங்களுக்கு இந்த எளிமையான ரெசிபி பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.