பெரும்பாலும் இட்லி தோசை என்றால் அதற்கு ஏதாவது ஒரு சட்னி செய்வோம். வேறு ஏதாவது சைடிஸ் செய்ய வேண்டும் என நினைத்தால் அதிக பட்சம் சாம்பார் செய்வோம். அப்படி எப்பொழுதும் ஒரே மாதிரி செய்யாமல் ரொம்ப சுலபமாக, அதே நேரத்தில் சுவையாக இருக்கக் கூடிய இந்த காலிஃபிளவர் குருமாவை செய்து கொடுங்க ரொம்பவே நல்லா இருக்கும். இந்த குருமாவை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
செய்முறை
இந்த குருமா செய்ய முதலில் ஒரு காலிஃபிளவரை எடுத்து மீடியம் சைஸ் நறுக்கி, சுடு தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் கழித்து தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாய் வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், 1 டேபிள் ஸ்பூன் சோம்பு, 1/2 டீஸ்பூன் சீரகம், 1/4 டீஸ்பூன் மிளகு, 10 சின்ன வெங்காயம், 1 துண்டு இஞ்சி,10 பூண்டு பல், 1 ஏலக்காய்,1 பட்டை, 2 லவங்கம், 1 பச்சை மிளகாய், 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 1/2 டீஸ்பூன் தனியா தூள், இத்துடன் கால் கப் துருவிய தேங்காய், 5 முந்திரி இவையெல்லாம் சேர்த்து லேசாக ஒரு முறை வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.
அடுத்ததாக வதக்கிய இந்த மசாலாவை நன்றாக ஆற விட்ட பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கரை வைத்து சூடானவுடன் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இலவங்கம், பட்டை, பிரியாணி இலை அனைத்தும் சேர்த்து பொரிந்த உடன், ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியவுடன் 1தக்காளியையும் அரிந்து சேர்த்து கொள்ளுங்கள். தக்காளி அதிகம் வதங்க வேண்டாம்.
இப்பொழுது காலிஃபிளவரை இதனுடன் சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலந்து கொள்ளுங்கள். இப்போது குக்கரை மூடி போட்டு ஒரு விசில் வரும் வரை விட்டு, அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: வெறும் 10 நிமிடத்தில் பச்சைப் பயிறு வைத்து சூப்பரான ஒரு கிரேவி தயார் செய்யலாம். இந்த கிரேவி செய்ய பருப்பு வேகும் நேரம் கூட எடுக்காதுன்னா பார்த்துக்கோங்க.
விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு மூடியை திறந்து கொத்தமல்லி பொடியாக நறுக்கி மேலே தூவி விடுங்கள். சுவையான காலிஃபிளவர் குருமா தயார். இந்த குருமாவில் காலி ஃபிளவர் உடன் கேரட், பீன்ஸ், பட்டாணி,உருளை கிழங்கு போன்றவை கூட சேர்த்து செய்யலாம். இன்னும் இதன் சுவை பிரமாதமாகவே இருக்கும். இந்த காலிஃபிளவர் குருமா ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.