இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எதற்கு வேண்டுமானாலும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கக் கூடிய இந்த கும்பகோணம் கடப்பா செய்வது ரொம்பவே ஈஸி தான். பாசி பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கடப்பா, டிபன் வகைகளுக்கு சைட் டிஷ் ஆக கொடுப்பார்கள். அருமையான நாவூரும் சுவைமிக்க இந்த கும்பகோணம் கடப்பா ரெசிபி எளிதாக வீட்டில் தயாரிப்பது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவில் இனி தெரிஞ்சுக்க போறோம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – ஒரு கப், உருளைக்கிழங்கு – இரண்டு, சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், பட்டை – இரண்டு துண்டு, கிராம்பு – 4, பெரிய வெங்காயம் – இரண்டு, கருவேப்பிலை – ஒரு கொத்து, தக்காளி – ஒன்று. அரைக்க: துருவிய தேங்காய் – அரை மூடி, பூண்டு பல் – நான்கு, இஞ்சி துண்டு – 2 இன்ச், பொட்டுக்கடலை – ஒரு ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், கசகசா – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 3. மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எலுமிச்சை – அரை மூடி, நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.
செய்முறை
முதலில் ஒரு கப் அளவிற்கு சிறுபருப்பை நன்கு 5 நிமிடம் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுத்த இந்த பருப்புடன் மூன்று மடங்கு அளவிற்கு தண்ணீர் சேர்த்து இதனுடன் ரெண்டு மீடியம் சைஸ் உருளைக்கிழங்குகளை தோலை சீவி விட்டு கழுவி சுத்தம் செய்து இரண்டு துண்டாக வெட்டி சேர்த்து நாலு விசில் விட்டு நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
வேக வைத்த உருளைக்கிழங்குகளை தனியாக எடுத்து விடுங்கள். பருப்பை மசித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
வெங்காயம் ஓரளவுக்கு வறுபட்டு வரும் பொழுது தக்காளி பழங்களை துண்டு துண்டாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். இவை மசிய வெந்து வருவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காய் சேர்த்து இதனுடன் காரத்திற்கு பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, பொட்டுக்கடலை, சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வெங்காயம், தக்காளி மசிந்ததும் அரைத்து வைத்த இந்த தேங்காய் கலவையை சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்து வரும் பொழுது, நீங்கள் வேக வைத்து மசித்துள்ள பருப்பையும் சேர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
எப்போதும் சாதாரண தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா? ரோட்டு கடைகளில் கிடைக்கும் மசாலா முட்டை தோசையை 5 நிமிடத்தில் நம்முடைய வீட்டிலும் செய்யலாம் வாங்க.
ஒரு கொதி வந்ததும் நீங்கள் எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளை மசித்து சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு, காரம், திக்னஸ் எல்லாம் சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஐந்து நிமிடம் நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைத்து அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளுங்கள். பொடியாக நறுக்கிய மல்லி தழையை தூவி சுடச்சுட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம், அருமையாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.