இந்த இட்லி தோசை எல்லாம் நாம் என்ன தான் கடையில் வாங்கி சாப்பிட்டாலும் அல்லது கடைகளில் பாக்கெட்டில் கிடைக்கும் மாவை வாங்கி செய்தாலுமே கூட வீட்டில் மாவு அரைத்து செய்யும் பொழுது கிடைக்கும் ருசியும் மனநிறைவும் இவைகளில் கிடைக்காது. ஆனால் தோசைக்கு மாவு எப்படி இருந்தாலும் ஓரளவுக்கு சமாளித்து விடலாம் ஆனால் இட்லிக்கு அரைக்கும் மாவு பக்குவம் சரியாக இருந்தால் மட்டுமே இட்லி நல்ல புசு புதுன்னு வரும். இது நிறைய பேருக்கு கொஞ்சம் சவாலான விஷயம் தான். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் உள்ள டிப்ஸை ஃபாலோ பண்ணி மாவரைச்சு பாருங்க. ஒரு மாசம் ஆனாலும் மாவு புளிக்காது இட்லியும் நல்ல புசு புசுன்னு வரும் வாங்க அது எப்படின்னு பாக்கலாம்.
ரேஷன் அரிசியில் இட்லி மாவு அரைப்பது எப்படி:
இந்த முறையில் மாவு அரைக்க எட்டு கப் ரேஷன் பச்சரிசி 4 கப் ரேஷன் புழுங்கல் அரிசி நன்றாக சுத்தம் செய்த பிறகு நாலு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நல்ல சுத்தமான தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக 200 கிராம் உளுந்து எடுத்து அதையும் நன்றாக அலசி சுத்தம் செய்த பிறகு உளுந்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அரிசி உளுந்து இரண்டும் ஐந்து மணி நேரம் வரை ஊற வேண்டும். இதற்கும் ரேஷனில் கிடைக்கும் உளுந்தையே பயன்படுத்தினால் இட்லி நன்றாக வரும்.
இப்போது ஐந்து மணி நேரம் கழித்து முதலில் உளுந்தை அரைத்து கொள்ள வேண்டும். உளுந்து அரைக்கும் பொழுது ஊற வைத்த தண்ணீரையும் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து அரைத்துக் கொள்ள வேண்டும் அப்போது தான் உளுந்து நல்ல உபரியாகி வரும். அதே போல் நீங்கள் அரைத்து எடுத்த பிறகு உளுந்து மாவின் மேல் லேசாக பபுல்ஸ் தெரிய வேண்டும். அந்த பதத்திற்கு அரைத்தால் தான் இட்லி நன்றாக வரும்.
அடுத்ததாக அரிசியை அரைத்துக் கொள்ளலாம். அரிசி போடும் பொழுது இரண்டு கைப்பிடி அளவிற்கு வெள்ளை அவலை ஒரு முறை அலசிய பிறகு அரிசியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இட்லி மிருதுவாக வர வேண்டும் என்று மாவு அரைக்கும் போது மீந்த சாதத்தை சேர்த்து அரைப்பார்கள். அப்படி அரைக்கும் போது இரண்டு மாவு இரண்டு நாட்களுக்கு மேல் தாங்காது புளித்து விடும்.
இப்பொழுது உளுந்து, அரிசி மாவு இரண்டையும் ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்த பிறகு நன்றாக கை வைத்து கலந்து கொள்ளுங்கள். மாவை எப்போதும் கலக்கும் போது நாம் கை வைத்து தான் கலக்க வேண்டும். கரண்டி வைத்து கலந்தால் மாவு பொங்கி வராது இட்லியும் கல்லு போல தான் இருக்கும். கரைத்த மாவில் நீங்கள் அடுத்த நாள் செய்வதற்கான மாவை மட்டும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு மீதி மாவை உடனே ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். மாவை கரைக்கும் போதே மொத்தமாக உப்பு சேர்த்து கரைத்து விட்டால் மாவு சீக்கிரம் புளித்து விடும் எனவே தேவைக்கு மட்டும் எடுத்து உப்பு போட்டு கரைத்துக் கொண்டு மீதி மாவை அப்படியே வைத்தால் தான் எத்தனை நாள் ஆனாலும் மாவு புளிக்காமல் நன்றாக இருக்கும்.
உப்பு போட்டு கரைத்த மாவை எட்டு மணி நேரம் கழித்து நீங்கள் எப்பொழுதும் போல இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்துக் கொள்ளலாம். இட்லி ஊற்றும் போதும் பானையில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்த பிறகு தான் இட்லி தட்டை வைக்க வேண்டும். இந்த மாவிற்கு நீங்கள் சமையல் சோடா மாவு கூட சேர்க்க தேவையில்லை அப்படியே ஊற்றினாலே இட்லி நல்ல புசுபுசுன்னு சாப்டா இருக்கும்.
இதையும் படிக்கலாமே: இந்த ஐடியா தெரியாம இத்தனை நாளா காசை கரியாக்கிடோமே! பாத்ரூம், கேஸ் ஸ்டவ், சிங்க், டைல்ஸ், இப்படி எல்லா கிளீனிங்க்கும் சேர்த்து இந்த ஒரு லிக்விட் போதும்.
வேலைக்கு செல்பவர்கள் இப்படி மாவு அரைத்து வைத்துக் கொண்டால் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்களும் இனி மாவு அரைக்கும் போது இந்த டிப்ஸ் பாலோ பண்ணி மாவரைக்கும் சாப்ட இருக்கும் மாவும் கெட்டுப் போகாது. இதற்கு கடைகளில் கிடைக்கும் அரிசி உளுந்து சேர்க்க வேண்டியது இல்லை ரேஷன் அரிசி உளுந்தே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.