குழம்பு என்றதும் நம் நினைவிற்கு வருவது சாம்பார், ரசம், காரக் குழம்பு இவை தான். இவற்றில் வித்தியாசமாகவும், ஆரோக்கியமாகவும், சத்தானதாகவும் இருக்கக்கூடிய குழம்பு நிறைய இருக்கின்றன. அவற்றுள் ஒன்றை தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படுகிற அத்தியாவசியமான சத்துக்கள் நிறைந்தது தான் கருவேப்பிலை. இந்த கருவேப்பிலையை நாம் எல்லா சமையலிலும் உபயோகப்படுத்துவோம். இருப்பினும் குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி அதை எடுத்து குப்பையில் வீசி விடுவர். அதனால் அதிலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்காமல் போய் விடுகிறது. இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்க்கப் போவது பூண்டு கருவேப்பிலை குழம்பு.
செய்முறை
ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலை போட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை நிறம் மாறியதும் அதை எடுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆறிய கருவேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொர வென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் தாளிப்பதற்காக 1 ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் வெந்தயம், 1/2 ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் சீரகம் இவற்றைப் போட வேண்டும். கடுகு வெடித்ததும் அதில் 25 பல் பூண்டு சேர்க்க வேண்டும்.
சின்ன வெங்காயம் இருந்தால் அதில் 15 சேர்க்க வேண்டும். பெரிய வெங்காயமாக இருந்தால் ஒன்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் இரண்டு சிட்டிகை பெருங்காயம் சேர்க்க வேண்டும். வெங்காயமும், பூண்டும் நன்றாக வதங்கிய பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை பொடியை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
அடுத்ததாக அதில் 3 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூளை சேர்க்க வேண்டும். ஐந்து தக்காளிகளை மிக்ஸியில் நன்றாக அரைத்து, அதனுடன் சேர்க்க வேண்டும். தக்காளி நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும். இப்பொழுது அதில் நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்து கரைத்து ஊற்றி அரை டீஸ்பூன் உப்பை சேர்க்க வேண்டும். மேலும் அதில் 11/2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். இப்பொழுது நன்றாக கிளறி விட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து குழம்பை கொதிக்க விட வேண்டும்.
குழம்பு வற்றி எண்ணெய் மேலே வரும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும். எண்ணெய் மேலே வந்த பிறகு, அதில் சிறிது பனைவெல்லத்தை சேர்க்க வேண்டும். வெல்லம் கரைந்த பிறகு, அதில் சிறிதளவு கருவேப்பிலையை தூவி இறக்கி விட வேண்டும். மிகவும் சுவையான பூண்டு கருவேப்பிலை குழம்பு தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே: வீட்ல ரவை இருக்கா? அப்போ ரொம்ப வித்தியாசமான சுவையில் இந்த ரெசிபி செஞ்சி பாருங்க.
இந்த குழம்பை நாம் தோசை, இட்லி, சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். மேலும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவர்.