காலை உணவு என்றதும் எப்போதுமே இட்லி தோசை என்று சாப்பிடாமல் கொஞ்சம் ஆரோக்கியமாக சாப்பிட்டால் நன்றாக தான் இருக்கும். அதிலும் காலையில் நாம் முதன் முதலில் எடுத்துக் கொள்ளும் உணவு தான் அந்த நாள் முழுவதும் நாம் ஆரோக்கியத்துடன் வேலை செய்ய உதவி புரியும். அப்படியான உணவை எவ்வளவு ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி ஒரு ஹெல்தியான டிபன் ரெசிபி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
செய்முறை
இந்த அடை செய்வதற்கு இரண்டு கப் அளவிற்கு இட்லி அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் அரை கப் கடலை பருப்பு, அரை கப் துவரம் பருப்பு, அரை கப் உளுத்தம் பருப்பு மூன்றையும் நன்றாக கழுவி சுத்தம் செய்து இத்துடன் ஐந்து மிளகாயும் சேர்த்து இரண்டு மணி நேரம் அப்படியே ஊற வைத்து விடுங்கள்.
அதற்குள்ளாக மரவள்ளிக் கிழங்கை மேல் தோல் நீக்கி சுத்தம் செய்த பிறகு நன்றாக துருவி அதையும் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஊறிய அரிசி பருப்பு இவற்றுடன் ஐந்து பல் பூண்டு, ஒரு ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் இவை எல்லாம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். மாவு பாதி அளவு அரை பட்டவுடன் துருவி வைத்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து இன்னும் ஒரு முறை நன்றாக அரைத்து மாவு ஒரு கெட்டியான பதத்திற்கு வந்ததும் வேறு ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிய பிறகு ஒரு பெரிய கேரட்டை துருவிக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், ஒரு கொத்து கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு அதை இந்த மாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லியை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை கரைந்து கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து சூடான பிறகு மாவை எடுத்து அடை மாவு பதத்திற்கு கொஞ்சம் கெட்டியாக ஊற்றி மேலே எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தட்டு போட்டு மூடி வேக விடுங்கள். இது ஒரு புறம் நன்றாக சிவந்த பிறகு மறுஸபுறம் திருப்பி போட்டு எடுத்து விடுங்கள். நல்ல சுவையான மரவள்ளி கிழங்கு அடை தயார்.
இதையும் படிக்கலாமே: மொறு மொறுன்னு தட்டை செய்வது இவ்வளவு ஈஸியா? தட்டை பிரியர்களுக்கு சுலபமான முறையில் அதன் தயாரிப்பு முறை!
இந்த அடைக்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். கண்டிப்பாக இந்த ஹெல்த்தியான ரெசிபி நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.