ஒரு நபரின் ஜாதகத்தில் மற்ற எல்லா கிரகங்களும் நல்ல நிலையில் இருப்பதைப் போலவே சூரிய கிரகமும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் சூரியன் பாதகமான அமைப்பில் இருந்தால் அந்த ஜாதகருக்கு சூரிய கிரக தோஷம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரக தோஷத்தால் ஜாதகர் வாழ்வில் உயர்வான நிலையை அடைய முடியாத நிலை ஏற்படும். இத்தகையவர்கள் செய்ய வேண்டிய சூரிய தோஷ பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
சூரிய தோஷம் நீங்க பரிகாரம்
ஜாதகத்தில் சூரிய கிரகம் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தாலோ அல்லது பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ அவர்களுக்கு சூரிய தோஷம் ஏற்படுகின்றது. இந்த சூரிய தோஷம் நீங்குவதற்கு அந்த தோஷமுள்ள ஜாதகர்கள் ஏதேனும் ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று அல்லது கார்த்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற சூரிய பகவானுக்குரிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒரு தினத்தில் சூரியனார் கோவிலுக்கு செல்லவேண்டும்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே இருக்கின்ற சூரியனார் கோயில் திருத்தலத்திற்கு சென்று, சூரிய பகவானுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை இந்த பரிகார வழிபாட்டை மேற்கொள்வதால் ஜாதகத்தில் சூரியன் பாதகமான நிலையில் இருந்தாலும், சூரிய தோஷங்கள் இருந்தாலும் ஜாதகருக்கு பாதக பலன்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும்.
சூரிய தோஷத்தால் வாழ்க்கையில் பாதகமான பலன்களை அடைபவர்கள், தினமும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து முகம், கை கால்களை கழுவிக்கொண்டு, சூரியன் உதிக்கின்ற நேரம் முதல் அது முழுமையாக வானில் தோன்றும் நேரம் வரை சூரிய பகவானை பார்த்தவாறு தங்களின் தோஷங்கள் நீங்க வேண்டும் என மனதார வேண்டி வழிபட்டு வந்தாலும் சூரிய கிரக தோஷம் பாதிப்பு குறைந்து, உடல் அளவில் நம் மனதளவிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
கோயில்களுக்கு செம்பு பாத்திரங்கள், சிவப்பு நிற மலர்களை தருவதாலும், வெல்லம், கோதுமை தானியம் போன்றவைகளை ஏழைகளுக்கு தானம் செய்வதாலும் ஒரு நபரின் ஜாதகத்தில் இருக்கின்ற சூரிய கிரக தோஷத்தை குறைத்து நன்மைகளை அதிகரிக்கச் செய்யும் எளிய தாந்திரீக பரிகாரங்களாக உள்ளன.
சிவபெருமான் சூரியனின் அம்சம் கொண்டவராக இந்த மத புராணங்கள் குறிப்பிடுகின்றன. எனவே சிவபெருமானுக்குரிய ருத்ராட்சத்தை சூரிய கிரக தோஷம் உள்ளவர்கள் அணிந்து கொள்வதால் நற்பலன்கள் ஏற்படும். குறிப்பாக 1 முக ருத்ராட்சம் அல்லது 12 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் சூரிய கிரக தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் நற்பலன்களை பெறுவார்கள்.
இதையும் படிக்கலாமே: அரசு பணி கிடைக்க பரிகாரம்
தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, சிறிய அளவிலான செம்பு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி, அதை உங்கள் வீட்டு வாயிலுக்கு வெளியில் சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைப்பது சூரிய கிரக (Surya dosha pariharam in Tamil) தோஷத்தை போக்குவதற்குரிய மிக எளிமையான ஒரு பரிகாரமாக இருக்கின்றது.