அனைவரின் இல்லங்களிலும் ஏதாவது சுப நிகழ்ச்சிகள் என்று நடக்கும் பொழுதோ அல்லது சுப செய்திகளை கேள்விப்படும் பொழுதோ வீட்டில் இனிப்புகளை செய்து கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. அவ்வாறு நாம் இனிப்புகளை செய்யும் பொழுது எப்பொழுதும் போல் கேசரி, பாயாசம் என்று செய்வதற்கு பதிலாக வித்தியாசமான முறையில் ஒரு அல்வாவை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த அல்வாவை நாம் வீட்டில் இருக்கும் வாழைப்பழத்தை வைத்து செய்ய முடியும். இந்த சமையல் குறிப்பு பகுதியில் வாழைப்பழ அல்வா எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
அல்வா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எப்படி நாம் அல்வா செய்து கொடுத்தாலும் முறையாக செய்தோம் என்றால் அந்த சுவைக்கு தட்டே காலியாகிவிடும் அல்லவா? வாழைப்பழத்தை சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இந்த வாழைப்பழ அல்வாவை ருசித்து சாப்பிடுவார்கள். நம்மால் இந்த அல்வாவை வாழைப்பழத்தில் தான் தயார் செய்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்த அல்வாவின் சுவை அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- ஒரு சீப்பு – தேன் வாழைப்பழம்
- முந்திரி – 50 கிராம்
- திராட்சை – 50 கிராம்
- ஏலக்காய் – 6, வெல்லம் – 1/2 கிலோ
- நெய் – 200 மிலி.
செய்முறை
முதலில் வாழைப்பழத்தை தோலுரித்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய இந்த வாழைப்பழ துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக கூலாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் வெல்லத்தை நன்றாக உடைத்து சேர்த்து, மறுபடியும் வெல்லம் கரையும் அளவிற்கு அரைக்க வேண்டும். கட்டிகள் ஏதுமின்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைக்க வேண்டும். சிறிது சூடான பிறகு அதில் சிறிது நெய்யை ஊற்ற வேண்டும். அதில் முந்திரி, ஏலக்காயை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். முந்திரி லேசாக சிவந்த பிறகு அதில் திராட்சையும் சேர்த்து வறுக்க வேண்டும். அனைத்தும் நன்றாக சிவக்க வேண்டும்.
இப்பொழுது அதில் அரைத்து வைத்திருக்கும் வாழைப்பழ விழுதை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். எளிதில் அடிப்பிடிக்கும் என்பதால் அதை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். தேவைப்படும்போது எல்லாம் சிறிது சிறிதாக நெய்யை அதில் சேர்த்து கிண்ட வேண்டும். அல்வாவில் ஊற்றிய நெய் தனியாக பிரியும் அளவிற்கு வரும் வரை கிண்டி கொண்டே இருக்க வேண்டும். அல்வா கண்ணாடி பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது ஒரு தட்டில் நெய்யை தடவி அதில் அல்வாவை போட்டு நன்றாக ஆற வைக்க வேண்டும். ஆறிய பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிட கொடுக்கலாம்.
இதையும் படிக்கலாமே: வெறும் பத்து நிமிடத்தில் மணக்க மணக்க ருசி தரும் ஆந்திரா ஸ்டைல் பப்பு செய்ய தெரியுமா உங்களுக்கு? தெரியாதவங்க ரெசிபியை படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
மிகவும் எளிமையான சத்து மிகுந்த வாழைப்பழ அல்வா தயாராகிவிட்டது. வீட்டில் விசேஷம் என்றதும் இப்படி வித்தியாசமான இனிப்பை செய்து அனைவரின் பாராட்டையும் பெறலாம்.