என்னதான் கறி குழம்பு, மீன் குழம்பு என்று சாப்பிட்டாலும் இந்த பருப்பு சாதத்திற்கு இருக்கும் சுவையே தனிதான். எவ்வளவு சாப்பிட்டாலும் அலுத்து போகாது. சுடச்சுட சாதத்தோடு நெய்விட்டு இந்த ஆந்திரா பப்பு போட்டு, ஆவக்காய் ஊறுகாய் வைத்து தொட்டு சாப்பிட்டு பாருங்கள். பக்கத்தில் ஒரு பெரிய அப்பளம். சொர்க்கம் தாங்க வாழ்க்கை. அதிலும் சுலபமாக சமைத்து நிறைவாக சாப்பிட்டால் எவ்வளவு சந்தோஷம். உங்களுக்கு ஆந்திரா ரெசிபி பிடிக்கும், அப்படின்னா இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம தெரிஞ்சி வச்சுக்கோங்க. உங்க வீட்ல சுடச்சுட செஞ்சு சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க.
செய்முறை
ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 250 கிராம் அளவு துவரம் பருப்பை போட்டு, இரண்டு முறை நன்றாக கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும். 30 நிமிடம் கழித்து இந்த பருப்பில், மீடியம் சைஸில் பெரிய வெங்காயம் நறுக்கியது 1, நறுக்கிய பெரிய தக்காளி பழம் 2, பச்சை மிளகாய் 3 லிருந்து 4 காரத்திற்கு ஏற்ப, கருவேப்பிலை 1 கொத்து, உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி மூன்று விசில் வைக்கவும்.
எல்லா பொருட்களும் நன்றாக வெந்து கிடைக்கும். பிரஷர் அடங்கியவுடன் ஒரு மத்தை வைத்து இந்த பருப்பை நன்றாக கடைந்து விடுங்கள். உங்க வீட்டுல ஸ்மாஷர், பிளண்டர் இருந்தா கூட அதை வைத்து எல்லா பொருட்களையும் கடைஞ்சுக்கோங்க. அடுத்து இதற்கு சூப்பரான ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும்.
தாளிப்பு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு, பொரிந்து வந்ததும் இடித்த பூண்டு பல் 8 போட்டு, சீரகம் 1/4 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, வர மிளகாய் கிள்ளியது 2 போட்டு, பெருங்காயம் 1/4 ஸ்பூன் போட்டு மணக்க மணக்க தாளித்து இதை அப்படியே பருப்பில் கொட்டி நன்றாக கலந்து விடுங்கள்.
இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி பருப்பை பரிமாறலாம். நாம் செய்த பருப்பும் சுட சுட இருக்கணும். சாதமும் சுடச்சுட இருக்கணும். நெய்யை உருக்கி இதன் மேலே ஊற்றி சுவைத்து பாருங்கள். வேற லெவல் டேஸ்ட். இதுவே மண் சட்டியில் இந்த பருப்பை கடைந்து சாப்பிட்டால் இதனுடைய ருசி இன்னும் இன்னும் சூப்பரா இருக்குங்க. சொல்றதுக்கு வார்த்தையே கிடையாது.
இதையும் படிக்கலாமே: அடுப்பு பற்ற வைக்க வேண்டாம். வறுக்க வேண்டாம். வெறும் ஐந்து நிமிடத்தில் சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட, சூப்பரான ஆந்திரா மீல்ஸ் பருப்பு பொடி தயார்.
மிஸ் பண்ணாதீங்க இந்த சுலபமான ரெசிபியை உங்க வீட்டிலயும் செஞ்சு பாருங்க. ஆந்திரா சமையல் வாசம் உங்க வீட்டிலயும் வீசும்.