என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதுதான் பலரின் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் வயதான தோற்றத்தை வெளிப்படுத்தக்கூடிய சுருக்கங்கள் முகத்தில் ஏற்பட்டவுடன் அவர்களுக்குள்ளே ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடுகிறது. இது வயதான காரணத்தினால் சிலருக்கு ஏற்பட்டாலும் இன்னும் சிலருக்கோ இளமையிலேயே இந்த சுருக்கங்கள் ஏற்பட்டு விடும். இந்த சுருக்கங்களை நீக்கி என்றும் இளமையான தோற்றத்தை பெறுவதற்கு உதவக்கூடிய ஒரு ஃபேஸ் க்ரீமை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
சுருக்கங்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது என்றாலும், நாம் அன்றாடம் நம்முடைய சருமத்தை முறையாக பராமரிப்பதன் மூலம் அந்த சுருக்கங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். முடிந்த அளவிற்கு ஈரத்தன்மை இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். முகத்தில் இயற்கையிலேயே தோன்றக்கூடிய எண்ணெய் சுரப்பியை முறையாக பராமரிப்பது மூலமும் சுருக்கங்கள் ஏற்படாமல் நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதை தவிர்த்து நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு இவை இரண்டும் சுருக்கத்தை நீக்கி இளமையான தோற்றத்தை தர உதவுகிறது.
பெரிய அளவில் இருக்கக்கூடிய ஒரு தக்காளியை எடுத்து அதை பாதியாக நறுக்கி கேரட் உரசுவது போல் உரசி கொள்ள வேண்டும். பிறகு இதை ஒரு மெல்லிய துணியை பயன்படுத்தி வடிகட்டி இதன் சாறை தனியாக எடுக்க வேண்டும். இதே போல் ஒரு உருளைக்கிழங்கையும் உரசி மெல்லிய துணியில் போட்டு வடிகட்டி சாறை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த தக்காளி சாறையும் உருளைக்கிழங்கு சாறையும் ஒன்றாக சேர்க்க வேண்டும்.
பிறகு இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சோளமாவை சேர்த்து கட்டி ஏற்படாத அளவிற்கு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்த இதை அடுப்பில் வைத்து அது கெட்டியாகும் வரை கைவிடாமல் கிண்ட வேண்டும். கெட்டியான பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விட்டு அதை குளிர விட வேண்டும். அதற்குள் அடுத்ததாக ஒரு ஸ்பூன் அளவிற்கு ஆளி விதையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 200 மில்லி தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். குறைந்த தீயில் 15 நிமிடம் அப்படியே கொதிக்க விட வேண்டும்.
15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு அது லேசாக சூடாக இருக்கும் பொழுது மெல்லிய துணியை பயன்படுத்தி வடிகட்டி ஆளி விதையின் சாறை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் ஏற்கனவே ஆற வைத்திருக்கும் தக்காளி கிரீமுடன் இந்த ஆளி விதை சாறையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு இதில் ஒரு ஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அவ்வளவுதான் நம்முடைய இளமை தோற்றத்தை பாதுகாக்க கூடிய கிரீன் தயாராகிவிட்டது.
இதை நம்முடைய முகத்தில் தடவி ஐந்து நிமிடம் வரை மசாஜ் செய்து விட்டு அரை மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி முகத்தை கழுவி விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: நிறத்தை அதிகரிக்கும் ஆரஞ்சு ஃபேஸ் க்ரீம்
இந்த முறையில் நாம் வீட்டிலேயே ஃபேஸ் க்ரீம் தயார் செய்து பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தும் நீங்கி இளமையான தோற்றத்தை பெற முடியும்.