- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்மாங்காய் தொக்கு செய்முறை

மாங்காய் தொக்கு செய்முறை

- Advertisement -

இப்பொழுது மாங்காய் சீசன். அனைத்து வகையான மாங்காயும் கிடைக்கும். பலரும் இந்த மாங்காயை வைத்து ஊறுகாய் செய்து வைத்துக் கொள்வார்கள். நம் வீட்டில் இருக்கும் சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை மாங்காயை நறுக்கி அதில் உப்பு மிளகாய்த்தூள் மட்டும் கலந்து சாப்பிடுவார்கள். மாங்காய் பிடிக்காத நபர்களே இருக்க முடியாது. மாங்காயில் எப்படிப்பட்ட பதார்த்தம் செய்தாலும் அதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு தான் பலரும் இருப்பார்கள். இதனாலேயே இந்த மாங்காய் சீசனில் பலரும் மாங்காயை நீண்ட நாட்கள் வைத்து உபயோகப்படுத்தும் வகையில் ஏதாவது ஒன்றை செய்து வைப்பார்கள். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் மாங்காய் தொக்கு எப்படி செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம்.

இந்த மாங்காய் தொக்கை ஒரு முறை நாம் செய்து வைத்துக்கொண்டாலே போதும். இதை ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம், வெளியில் வைத்தும் பயன்படுத்தலாம். ஆறு மாதங்கள் வரை இந்த தொக்கு கெட்டே போகாது. இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் என்று அனைத்திற்கும் மிகவும் சுவையாக இருக்கக்கூடிய ஒரு அற்புதமான மாங்காய் தொக்கு. இதை செய்யும் பொழுதே நம் வீட்டில் இருக்கும் அனைவரின் நாக்கிலும் எச்சில் ஊற ஆரம்பித்து விடும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • மாங்காய் – 4
  • தேங்காய் எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 15
  • வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயம் – 2 டேபிள் ஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 2 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – 2 கொத்து
  • உப்பு – தேவையான அளவு
  • புளி கரைசல் – 5 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் – 4 டீஸ்பூன்

செய்முறை

முதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு அதை துருவி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதில் 10 காய்ந்த மிளகாயை சேர்த்து குறைந்த தீயில் வைத்து சிவக்க வறுக்க வேண்டும். காய்ந்த மிளகாய் லேசாக சிவந்த பிறகு இதனுடன் வெந்தயத்தை சேர்த்து வெந்தயமும் சிவக்கும் வரை வருக்க வேண்டும். வெந்தயம் நன்றாக சிவந்த பிறகு அதில் பெருங்காயத்தூளை சேர்த்து நன்றாக வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி நல்லெண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, ஐந்து காய்ந்த மிளகாய், கருவேப்பிலை இவற்றை சேர்க்க வேண்டும். கடுகு பொரிந்ததும் நாம் துருவி வைத்திருக்கும் மாங்காயை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் தண்ணீர் ஊற்றக்கூடாது. குறைந்தது பத்து நிமிடமாவது அந்த எண்ணெயிலேயே மாங்காய் வேக வேண்டும்.

- Advertisement -

மாங்காய் நன்றாக வெந்த பிறகு தேவையான அளவு உப்பு, புளி கரைசல், வெல்லம் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கடைசியாக நாம் ஏற்கனவே பொடி செய்து வைத்திருக்கும் பொடி அனைத்தையும் இதில் சேர்த்து நன்றாக கலந்து மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றி அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். மிகவும் சுவையான மாங்காய் தொக்கு தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே : இஞ்சி குழம்பு செய்முறை

சீசனுக்கு வரும் காய்கறிகளை பயன்படுத்தி இந்த முறையில் நாம் செய்து வைத்துக் கொள்வதன் மூலம் சீசன் முடிந்த பிறகும் நம்மால் பயன்படுத்த முடியும்.

சற்று முன்