இவ்ளோ நாள் லீவ் விட்டிருந்தாங்க. காலையில் வேலைக்கு போறவங்களுக்கு மட்டும்தான் சமைக்கிற ஒரு சூழ்நிலை இருக்கும். வேலைக்கு போறவங்க குழம்பு காய் என்று எது செஞ்சாலும் எடுத்துட்டு போவாங்க. ஆனா ஸ்கூலுக்கு போற பசங்க இந்த மாதிரி குழம்பு காய்கறியை எடுத்துட்டு போறத விரும்ப மாட்டாங்க. அதுக்கு பதிலா கலவை சாதத்தை எடுத்துட்டு போகணும்னா ஆசைப்படுவாங்க.
அதுவும் பிரியாணி டேஸ்டோட இருக்கிற எந்த சாதமா இருந்தாலும் அதை விரும்பி சாப்பிடுவாங்க. இப்படி பிரியாணிக்கு சரிசமமான சுவையில எந்தவித காய்கறியும் சேர்க்காமல் வெறும் வெங்காயம் தக்காளி மட்டும் போட்டு செய்யக்கூடிய ஒரு எளிமையான அதேசமயம் அருமையான தக்காளி சாதத்தை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் – 200கி
- புதினா – ஒரு கப்
- கொத்தமல்லி – ஒரு கப்
- பட்டை – 2
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 2
- பிரியாணி இலை – 2
- தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
- தக்காளி – 350 கிராம்
- பச்சை மிளகாய் – 4
- மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
- பாஸ்மதி அரிசி – 2 கப்
- தண்ணீர் – 3 கப்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை கழுவி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். குக்கர் நன்றாக சூடானதும் அதில் எண்ணெயை ஊற்றுங்கள். பிறகு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போன்றவற்றை சேர்க்க வேண்டும். அடுத்ததாக இதில் வெங்காயத்தை சேர்த்து லேசாக வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்க வேண்டும்.
பிறகு பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும். இவை நன்றாக வதங்கி பச்சை வாடை போன பிறகு இதில் பொடியாக நறுக்கிய புதினா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இவை இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கியதும் இதில் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், தயிர் போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
மிளகாய் தூளின் பச்சை வாடை நீங்கிய பிறகு நாம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை தண்ணீர் இல்லாமல் இதனுடன் சேர்த்து மூன்று கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பையும் சேர்த்து ஒரே ஒரு முறை கிளறிவிட்டு குக்கரை மூடி விட வேண்டும். மிதமான தீயில் இரண்டு விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு விசில் முழுவதும் சென்ற பிறகு ஒரு ஸ்பூன் அளவு நெய்யை மட்டும் மேலாக ஊற்றி ஒரு முறை கிளறி டிபன் பாக்ஸில் வைத்து விடலாம். மிகவும் சுவையான தக்காளி சாதம் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: மாம்பழ பர்பி செய்முறை
காய்கறிகள் விரும்பாத குழந்தைகளுக்கு இந்த முறையில் பிரியாணி சுவையில் தக்காளி சாதம் செய்து தருவதன் மூலம் நன்றாக சாப்பிடுவார்கள்.