நம் வீட்டில் பூஜை செய்யும் பொழுது சில விஷயங்களை முறையாக கடைபிடித்தால், தெய்வ கடாட்சம் உண்டாகும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடவுளுக்கு பூஜை செய்யும் பொழுது நைவேத்தியம் ஏன் படைக்கப்படுகிறது? நைவேத்திய பொருள் எவ்வளவு நேரம் அப்படியே இருக்க வேண்டும்? என்பது போன்ற தகவல்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து அறிய இருக்கிறோம்.
பூஜை செய்யும் பொழுது பூஜை அறையில் பஞ்சபூதங்களும் இருக்க வேண்டும் என்பார்கள். நிலம், காற்று, ஆகாயம் இம்மூன்றும் பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. நீரும், நெருப்பும் இன்றி பூஜையை செய்யக் கூடாது. விளக்கு ஏற்றும் பொழுது நெருப்பு உண்டாகிறது. பஞ்ச பாத்திரத்தில் நீரையும் வைத்து பூர்த்தி செய்து, பூஜையை துவங்க வேண்டும். பஞ்சபூதங்கள் இருந்தால் மட்டும் போதுமா? என்றால் போதும் தான், இருப்பினும் நைவேத்திய பிரசாதம் படைக்கும் பொழுது இறைவனுடைய மனமும் குளிர்ச்சி அடையும் என்பது நியதி.
ஒருவரிடம் சாதாரணமாக ஒரு உதவி கேட்பதை விட, வயிறு நிறைய இஷ்ட பொருளை வைத்து படையல் போட்டு சாப்பிட வைத்து, அதன் பின் நீங்கள் உதவி கேட்டு பாருங்க.. மனதார செய்வார்கள். அது போல தான் கடவுளும்! கடவுளுக்கு பிடித்தவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடும் பொழுது கடவுளுடைய மனம் குளிர்ந்து நம்முடைய வேண்டுதல்களை வரமாக கொடுப்பாராம்.
நைவேத்தியம் வைக்கும் பொழுது எந்தெந்த கடவுளுக்கு? எந்த மாதிரியான பிரசாதங்கள் பிடிக்கும்? என்பதை அறிந்து கொண்டு தயார் செய்ய வேண்டும். மகாலட்சுமிக்கு இனிப்பு மிகுந்த சர்க்கரை பொங்கல் பிடிக்கும். ஈசனுக்கு தயிர் சாதம், பெருமாளுக்கு புளியோதரை ரொம்பவும் இஷ்டமான பொருள். விநாயகருக்கு மோதகமும், கொழுக்கட்டையும் என்றால் அலாதி பிரியம். இப்படி ஒவ்வொரு கடவுளுக்கும், அவர்களுக்கு பிடித்த மாதிரி நைவேத்தியம் படைத்து வழிபடும் பொழுது வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.
வீட்டில் பொதுவாகவே பூஜை செய்யும் பொழுது பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் என்று எதையாவது வைத்து வழிபட வேண்டும். அப்படி எதுவும் முடியவில்லை என்றாலும் பேரிச்சை பழம், வாழைப்பழம், கற்கண்டு அல்லது மற்ற பழ வகைகளை வைத்து பூஜை செய்யலாம். பரிகார பூஜைகள், விசேஷங்களில் செய்யப்படும் பூஜைகளில் எல்லா விதமான பிரசாதங்களும் தயாரிக்கப்பட்டு படையல் போடுவது வழக்கம். இப்படி நைவேத்தியம் படைக்கும் பொழுது அந்த பொருட்களில் சாத்வீகமாக வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் செய்ய வேண்டும். நைவேத்திய பொருட்கள் தயார் செய்யும் பொழுது எச்சில் படும் என்பதால் உப்பு, காரம் சரி பார்க்க கூடாது.
இதையும் படிக்கலாமே:
சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு
இப்படி தயாரிக்கப்பட்டு பூஜையில் வைக்கப்படும் நைவேத்திய பொருள், கடவுள் மனமார ஏற்றுக் கொள்வதாக ஒரு நம்பிக்கை உண்டு. சிலர் பிரசாதம் வைத்த கொஞ்ச நேரத்திலேயே எடுத்து எல்லோருக்கும் சாப்பிட கொடுப்பார்கள். மற்றொரு சிலர் அப்படியே நீண்ட நேரம் காய விட்டு விடுவார்கள். இது ரெண்டுமே தவறான செயலாகும். பூஜைக்கு வைக்கப்படும் பிரசாதங்கள், பூஜையில் ஏற்றப்படும் விளக்கு அணையும் வரை அப்படியே இருக்க வேண்டும். விளக்கு அணைந்த பின்பு உடனேயே காய விடாமல் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து சாப்பிட வேண்டும். அப்போது தான் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் வேண்டுதல்களும் முழுமை அடையும் என்பது ஐதீகம்.