ஒருவருடைய அழகை மேலும் அழகாக காட்டுவதற்கு உதவக் கூடியது தான் நம்முடைய தலைமுடி. அப்படிப்பட்ட தலைமுடி இயற்கையாகவே அழகாக இருந்து விட்டால் அதனால் நாம் அழகாக தெரிவோம். இதுவே முடி உதிர்ந்து அடர்த்தி இல்லாமலோ வழுக்கை போல காணப்பட்டாலும், பொடுகு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனால் நம்முடைய அழகு மேலும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து முடியை அடர்த்தியாகவும் அழகாகவும் மாற்றுவதற்கு உதவக்கூடிய ஷாம்புவை வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
வெங்காய ஷாம்பு தயார் செய்யும் முறை
ஒருவருடைய தலைமுடியில் பல பிரச்சினைகள் உண்டாகும். பொடுகு பிரச்சனை, முடி உதிர்தல், வழுக்கை விழுதல், முடி அடர்த்தியாக இல்லாமல் வலுவிழந்து அதிக அளவில் முடி உதிர்தல் போன்ற பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து நாம் ஷாம்பு தயார் செய்தோம் என்றால் அந்த பிரச்சினைகள் அனைத்துமே விரைவிலேயே சரியாகிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கக்கூடிய ஒரு பொருளாக திகழ்வதுதான் நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய வெங்காயம்.
வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். மேலும் வழுக்கை தலையில் கூட வெங்காயத்தை வைத்து தேய்த்தோம் என்றால் முடி வளர்ந்துவிடும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வெங்காயத்தை வைத்து தான் ஷாம்பு தயார் செய்ய போகிறோம். இதற்கு நமக்கு தேவைப்படுகிற மற்றொரு முக்கியமான பொருள் என்னவென்றால் அதுதான் ஆளி விதை. ஆளி விதை ஜெல்லை நாம் தலையில் தடவுவதன் மூலம் அதில் இருக்கக்கூடிய ஒமேகா 6 நம்முடைய தலை முடியை வலுவாக்கி அடர்த்தியாக வளரச் செய்யும். இப்பொழுது ஷாம்புவை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு பெரிய வெங்காயமாக இரண்டு வெங்காயத்தை எடுத்து கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் உபயோகப்படுத்துவதாக இருந்தால் 15லிருந்து 20 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளலாம். இதன் தோலை நீக்கிவிட்டு நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் கழித்து ஊற வைத்திருந்த வெங்காயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அதை வடிகட்டியை பயன்படுத்தி நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது வெங்காயச்சாறு தயாராகிவிட்டது.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இந்த வெங்காய சாரை அதில் ஊற்ற வேண்டும். வெங்காய சாறு லேசாக சூடானதும் அதில் 5 ஸ்பூன் அளவிற்கு ஆளி விதையை சேர்க்க வேண்டும். குறைந்த தீயில் வைத்து 20 நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள். இது முட்டையின் வெள்ளை கரு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இதில் நாம் எப்பொழுதும் உபயோகப்படுத்தும் ஷாம்புவில் இருந்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு ஷாம்புவை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் 5 ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ள வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் இதில் எசன்ஸியல் ஆயில் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது இதை மிக்ஸி ஜாரில் போட்டு லேசாக இரண்டு சுற்றும் மட்டும் சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் ஷாம்பு தயாராகிவிட்டது. இந்த ஷாம்புவை நாம் எப்பொழுதும் தலைக்கு ஷாம்பு உபயோகப்படுத்துவது போலயே உபயோகப்படுத்திக் கொள்ளலாம். நன்றாக மசாஜ் செய்து பிறகு தலைமுடியை அலச வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்ற வீதம் ஒரு மாதம் அதாவது நான்கு வாரங்கள் நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தலை முடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கி தலைமுடி அடர்த்தியாக ஆரோக்கியமாக வளரும்.
இதையும் படிக்கலாமே:முகம் பளபளப்பாக மாற பேசியல்
கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்துவதை தவிர்த்து விட்டு நாமே நம்முடைய கைப்பட வீட்டிலேயே இந்த முறையில் ஷாம்பு தயார் செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் நம் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.