கார்த்திகை மாதமே சிறப்பு மிகுந்த மாதம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை நாட்கள் என்பது அதீத சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படுகிறது. அந்த வளர்பிறை நாட்களில் வரக்கூடிய ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருக்கின்றன. பொதுவாகவே நாம் ஒவ்வொரு திதிக்கும் எந்தெந்த தெய்வத்தை வழிபாடு செய்வோமோ அதே வழிபாட்டையே இந்த கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய திதிகளில் செய்தோம் என்றால் மற்ற மாதங்களில் செய்ததை விட பல மடங்கு பலம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம்குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வளர்பிறை பஞ்சமி வாராகி வழிபாடு
பஞ்சமி என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய முதல் தெய்வம் வாராகி அம்மன் தான். நம்முடைய கஷ்டங்களையும், துன்பங்களையும், துயரங்களையும், எதிரிகளின் தொல்லையையும் நீக்கி வளமான வாழ்க்கையை வழங்க கூடியவளாக தான் வாராகி அம்மன் திகழ்கிறாள். உக்கிர தெய்வமாக இருக்கக்கூடிய இந்த அம்மனை ஒவ்வொரு மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதியில் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி என்பது டிசம்பர் மாதம் 5-ம் தேதி வியாழக்கிழமை வருகிறது, அன்றைய தினத்தில் வாராஹி அம்மனை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி பார்ப்போம்.
பலரும் பஞ்சமி திதி அன்று வீட்டில் வாராகி அம்மனின் சிலை வைத்திருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து தேங்காய் தீபம், பஞ்சமுக தீபம், வாராகி அம்மனுக்கு பிடித்த சிவப்பு நிற மலர்கள், வாராகி அம்மனுக்கு பிடித்த பழங்கள், வாராகி அம்மனுக்கு பிடித்த நெய்வேத்தியம் என்று ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்வார்கள். வாராகி அம்மனின் சிலை இல்லாதவர்கள் கூட வாராஹி அம்மனின் படத்தை வைத்து இந்த முறையில் வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ சிலையோ படமோ இல்லாவிட்டாலும் பஞ்சமி திதி அன்று பஞ்சமுக தீபம் ஏற்று அதை வாராஹி அம்மனாக பாவித்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள்.
இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதி அன்று ஒரே ஒரு மணி நேரம் மட்டும் தீபம் ஏற்றி எளிமையான வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் வாராகி அம்மனின் அருள் என்பது நமக்கு கிடைக்கப்பெற்று அனைத்து விதமான செல்வங்களையும் நம்மால் பெற முடியும். இந்த தீபத்தை மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் அந்த ஒரு மணி நேரம் முழுவதும் எரியும்படி ஏற்ற வேண்டும். அதற்கு முதலில் வீட்டு பூஜை அறையில் நடுவே ஒரு மனைப் பலகையை போட்டுக் கொள்ளுங்கள். அந்த மனைப் பலகையின் மேல் சிவப்பு நிற துணியை விரித்து வாராகி அம்மன் படம் இருக்கும் பட்சத்தில் அதை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சிலை இருக்கும் பட்சத்தில் சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
அப்படி இரண்டுமே இல்லை என்றாலும் பரவாயில்லை ஒரு தாம்பாள தட்டில் வாசனை நிறைந்த மலர்களை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேலே ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். இந்த அகல் விளக்கிற்கு 5 என்ற எண்ணிக்கையில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். பஞ்சமுக விளக்கை வைத்து பஞ்சமுக தீபம் ஏற்றுவதாக இருந்தாலும் தவறு கிடையாது. இதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு வடக்கு பார்த்தவாறு ஏற்ற வேண்டும். பிறகு இந்த தீபத்திற்கு முன்பாக ஏதாவது ஒரு கிழங்கு வகைகளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். எதுவுமே இல்லை என்றாலும் ஒரு டம்ளர் தண்ணீரையாவது அந்த தீபத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.
பிறகு அந்த தீபத்தை 11 முறை வலம் வர வேண்டும். அவ்வாறு வலம் வரும் பொழுது ஒவ்வொரு முறையும் “ஓம் வாராகி தாயே போற்றி ஓம்” என்னும் எளிமையான மந்திரத்தை கூறிக்கொண்டு வலம் வர வேண்டும். இவ்வாறு வலம் வந்து முடித்த பிறகு 16 செல்வங்களும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வேண்டுதலை அந்த தீபச்சுடரொளியில் இருக்கக்கூடிய வாராகி அம்மனை பார்த்து கூற வேண்டும். ஒரு மணி நேரம் முழுவதும் தீபம் எரிந்து முடித்த பிறகு அந்த தீபத்தை குளிர வைத்து எடுத்து வைத்து விடலாம்.
இதையும் படிக்கலாமே:5-12-2024 அபிஜித் நட்சத்திர நேரம்
வளங்களை வாரி வழங்கக் கூடிய வாராகி அம்மனை வளர்பிறை பஞ்சமி திதி அன்று இந்த ஒரு மணி நேரம் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய அனைத்து விதமான செல்வங்களைப் பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.