சிவபெருமானுக்குரிய கிழமை திங்கட்கிழமை. அப்படிப்பட்ட திங்கட்கிழமை சிவபெருமானுக்குரிய சிறப்பான மாதமான கார்த்திகை மாதத்தில் வரும்பொழுது சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி நாம் சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நாம் என்ன வேண்டுதல் வைத்தோமோ அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சந்திர பகவான் சிவபெருமானிடம் தன்னுடைய கிழமையில் சிவபெருமானை யார் ஒருவர் முழு மனதோடு வேண்டுகிறாரோ அவருடைய வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று வரம் பெற்றாராம். அதனால்தான் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாத திங்கட்கிழமை ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சோமவார தீபம்
கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையான இன்று சிவபெருமானுக்குரிய இந்த மூன்று தீபங்களில் ஏதாவது ஒரு தீபத்தை மட்டும் நம்முடைய வீட்டில் ஏற்றி வைத்து சிவபெருமானை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது. உணவிற்கு எந்தவித பஞ்சமும் வராது, பணவரவு அதிக அளவில் உண்டாகும், கடன் பிரச்சினை தீரும், தோஷங்கள் நிவர்த்தியாகும், நினைத்தது நினைத்தபடி நடந்திடும் என்று இந்த தீபத்திற்குரிய பலன்களை நாம் கூறிக் கொண்டே செல்லலாம். அந்த தீபங்களை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த பதிவில் மூன்று தீபங்களை கூறி உள்ளோம். அந்த மூன்றில் ஏதாவது ஒரு தீபத்தை மட்டும் ஏற்ற வேண்டும். ஏற்ற வேண்டிய கிழமை திங்கட்கிழமை. ஏற்ற வேண்டிய நேரம் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வரக்கூடிய பிரதோஷ நேரம். இதற்கு ஒரு அகல் விளக்கும் நல்லெண்ணையும் பஞ்சுத்திரி வேண்டும். இது மூன்று தீபங்களுக்கும் பொதுவானது. இப்பொழுது சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று தரக்கூடிய தீபத்தை பற்றி முதலில் பார்ப்போம்.
இந்த தீபத்திற்கு நமக்கு ஒரு ருத்திராட்சம் வேண்டும். சிவபெருமானுக்குரிய முக்கியமான பொருட்களுள் ஒன்றுதான் ருத்ராட்சம். அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் பஞ்சமுக ருத்ராட்சம் என்பது கிடைக்கும். ஒரு புதிய ருத்ராட்சத்தை வாங்கிக் கொள்ளுங்கள். மாலை நேரத்தில் ஒரு தட்டை வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டுக் கொள்ளுங்கள். பிறகு இந்த ருத்ராட்சத்தை அந்த எண்ணெயில் போட வேண்டும். பிறகு தீபம் ஏற்றி சிவபெருமானுக்குரிய பஞ்சாட்சர மந்திரத்தை முழு மனதோடு தங்களால் இயன்ற அளவு கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் நமக்கு சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
அடுத்ததாக வில்வ இலை தீபம். கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவார நாளான இன்றைய தினத்தில் பலரும் சிவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது பிரசாதமாக வில்வ இலைகள் அவர்களுக்கு கிடைக்கும். அந்த வில்வ இலைகளை எடுத்து வந்து தட்டிற்கு மேல் வைத்து அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். தீபம் எரிந்து முடிந்த பிறகு இந்த வில்வ இலைகளை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த முறையில் நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் கடைகளில் இருந்தும் வில்வ இலைகளை வாங்கி வைத்து இந்த தீபத்தை ஏற்றலாம்.
கடைசியாக சந்திர பகவானுக்குரிய நெல் தீபம். திங்கட்கிழமை என்பது சந்திர பகவானுக்குரியது என்றும் சந்திர பகவானுக்குரிய தானியமாக கருதப்படுவது நெல் என்றும் நம் அனைவருக்குமே தெரியும். நெல்லை வாங்கி வந்து தட்டில் பரப்பி அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றி சிவபெருமானுடைய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரிப்பதன் மூலம் சிவபெருமானின் அருளும் சந்திர பகவானின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான மனக்கஷ்டமும், பணக்கஷ்டமும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும். நெல் கிடைக்காதவர்கள் பச்சரிசியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:4வது வாரம் கார்த்திகை சோமவார விரதம்
இந்த மூன்று தீபங்களில் எந்த தீபத்தை தங்களால் ஏற்ற இயலுமோ அந்த தீபத்தை முழுமனதுடன் ஏற்றி சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.