ஒரே நிலையில் ஒரே மாதிரியான வாழ்க்கை நம் தன்னம்பிக்கையை குறைத்து விடும். படிப்படியாக முன்னேற்றம் இருந்தால் தான் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குரு பகவான் தொழில் முன்னேற்றத்தை கொடுக்கக் கூடியவர். உயர் பதவிகளையும், வருமானத்தையும் அதிகரிக்க செய்யக் கூடியவர். இவரை இப்படி வழிபடுவதால் எதிர்பாராத திருப்பங்கள் நம் வாழ்வில் உண்டாகும். வாழ்க்கை முன்னேற குரு பகவானை எப்படி வழிபடுவது? என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
உயர்பதவி கிடைக்க, தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாக, வேலையில் ப்ரமோஷன் கிடைக்க, புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு லாபம் உண்டாக, வியாபார விருத்தி ஏற்பட வியாழன் கிழமையில் தொடர் குரு வழிபாடு மேற்கொள்வது நல்லது. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இவரின் கடைக்கண் பார்வை நம் மீது படாதா? என்று பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
குருவிற்கு உகந்த கிழமை வியாழன் கிழமை. அவருக்கு உகந்த நிறம் மஞ்சள் நிறமாகும். வியாழன் கிழமையில் குருவிற்கு தொடர்ந்து விளக்கேற்றி வர வேண்டும். இவருக்கு ஏற்றப்படும் விளக்குகளின் எண்ணிக்கை 11 அல்லது 21 ஆக இருப்பது உத்தமம். குறைந்தபட்சம் 11 விளக்குகள் ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம். விளக்கில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் சுத்தமான நெய் ஆகிய மூன்றும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
இது குரு அருள் பெற்று தரக் கூடிய அற்புத கலவை ஆகும். இக்கலவையை ஒவ்வொரு அகல் விளக்கிலும் நிறைவு செய்து, அதில் சுத்தமான பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்றி வையுங்கள். நவகிரக சன்னதியில் பொதுவாக வழிபடும் பொழுது ஒன்று அல்லது ஒன்பது என்ற எண்ணிக்கையில் வலம் வர வேண்டும். குருவை வழிபடும் பொழுது 3, 9, 11 ஆகிய எண்ணிக்கையில் வலம் வாருங்கள்.
குருவை வலம் வரும் வேளையில், குரு நமஸ்காரம் வைத்துக் கொண்டே மனதில் குருவை நினைத்து, நான் இப்படியே இல்லாமல் தொடர்ந்து தொழில் ரீதியான முன்னேற்றம் எனக்கு ஏற்பட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். குருவை வழிபடும் பொழுது கையில் தாம்பூலம் வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலை, பாக்கு, பூ, பழம் வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். கொண்டைக்கடலை பிரியராக இருக்கும் இவருக்கு, கொண்டைக் கடலையால் மாலை கோர்த்து சாற்றுங்கள் அல்லது கொண்டைக் கடலையை நைவேத்தியம் படைத்து முல்லை அல்லது மல்லி மலர்களால் மாலை கோர்த்து சாற்றி வழிபட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
முகம், மூக்கு சொரசொரப்பு நீங்க
வியாழன் கிழமையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், இயலாதவர்களுக்கும் கொண்டைக் கடலையை தானம் செய்து வர வேண்டும். குரு பகவானை இப்படி முறையாக 9 வாரங்கள் ஒவ்வொரு வியாழன் கிழமை தோறும் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, மாலை போட்டு, நைவேத்தியம் படைத்து, விளக்கு ஏற்றி வைத்து, குரு ஸ்தோத்திரங்கள், குரு மந்திரங்கள் உச்சரித்து வலம் வந்து வழிபட வேண்டும். இப்படி வழிபட்டால் பதவி உயர்வு, எதிர்பார்த்த லாபம், தொழில் ரீதியான முன்னேற்றம் அனைத்தும் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கனம் குரு வழிபாடு மேற்கொண்டு ஒரே இடத்தில் தேங்கி நில்லாமல் தொடர்ந்து முன்னேறுங்கள்.