- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalராகு தோஷ துர்க்கை வழிபாடு

ராகு தோஷ துர்க்கை வழிபாடு

- Advertisement -

ராகு தோஷம் என்பது ஜோதிட ரீதியாக பலருக்கு இருக்கும் ஒரு குறைபாடாகும். இது திருமணத் தடை, தொழில் நஷ்டம், உடல்நலக் கோளாறுகள், மன அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். ராகுவின் அதிதேவதை துர்க்கை அம்மன் என்பதால், ராகு தோஷம் உள்ளவர்கள் துர்க்கையை வழிபடுவது மிகச் சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. ராகு தோஷ நிவர்த்திக்கு துர்க்கை அம்மன் வழிபடும் முறை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு நாளும் ராகு காலம் மாறுபடும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது கூடுதல் பலனைத் தரும். ஏனெனில் செவ்வாய் கிரகமும், ராகுவும் இணைந்து மங்கள சண்டிகையாக அம்பிகையை வழிபடுவதாக ஐதீகம். இது மாங்கல்ய தோஷம், குழந்தை பாக்கியத்தடை, தொழில் தடைகள் போன்றவற்றை நீக்கும். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் இருக்கும் தீர்க்க முடியாத துன்பங்கள் நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் வழிபடுவது வறுமையை நீக்கி, செல்வ வளத்தை அதிகரிக்கும். நவமி திதியில் துர்க்கையை வழிபடுவதும் சிறப்பு.

- Advertisement -

துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுவது மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதன் சாற்றைப் பிழிந்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். பிழிந்த எலுமிச்சைத் தோல்களை தலைகீழாகக் கவிழ்த்து, அதில் திரி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். ஒற்றை விளக்காக ஏற்றாமல், ஜோடியாக இரண்டு எலுமிச்சை விளக்குகளை ஏற்ற வேண்டும். தீபத்தின் சுடர் அம்மனை நோக்கி இருக்க வேண்டும். பஞ்சு திரி அல்லது தாமரை தண்டு திரி பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்துவது உகந்தது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது நல்லது. விளக்கேற்றிய பிறகு மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது கோவிலில் அல்லது வீட்டில் அமர்ந்து துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துர்க்கைக்கு செவ்வரளி, மல்லிகை, மஞ்சள் சாமந்தி போன்ற சிவப்பு அல்லது மஞ்சள் நிற மலர்களை அணிவிப்பது சிறப்பு. தயிர் சாதம், பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்றவற்றை நிவேதனமாகப் படைக்கலாம். பிழிந்து வைத்த எலுமிச்சை சாற்றினை தேனுடன் கலந்து பானம் தயாரித்து நிவேதனம் செய்யலாம். உளுந்தால் செய்யப்பட்ட பலகாரங்கள், வடை போன்றவற்றை ராகு பகவானுக்கு உகந்தது என்பதால், அதையும் படைக்கலாம்.

- Advertisement -

துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால், அர்ச்சனை முடிந்த பிறகே விளக்கேற்ற வேண்டும். துர்க்கை போற்றி அல்லது துர்க்கை ஸ்தோத்திரங்கள் சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்யலாம். கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையை சுத்தம் செய்து, கோலமிட்டு, சுத்தமான மணைப் பலகையின் மீது நுனி வாழை இலையை வைத்து, அதன் நடுவே பச்சரிசி பரப்பி, அதன் மையத்தில் சிறிது துவரம் பருப்பைப் பரப்ப வேண்டும். இதன் நடுவே குத்துவிளக்கு அல்லது காமாட்சி விளக்கை வைத்து, அதை துர்க்கையாக பாவித்து விளக்கேற்றி வழிபடலாம். ராகு கால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நல்லது. முடியாதவர்கள் பால் அல்லது பழம் அருந்தலாம்.

இதையும் படிக்கலாமே:
சனிக்கிழமை அதிசக்தி வாய்ந்த சனி பகவான் வழிபாடு

“ஓம் ஸ்ரீ துர்க்காயை நமஹ” அல்லது “நாகத் துவாஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹே தந்நோ ராகு ப்ரசோதயாத்” போன்ற ராகு காயத்ரி மந்திரங்களை 108 முறை ஜெபிப்பது ராகு தோஷத்தின் பாதிப்பைக் குறைக்கும். துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை தினசரி பாராயணம் செய்யலாம். ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை என்பதால், துர்க்கையை வழிபட்ட பிறகு நவகிரகத்தை சுற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இருப்பினும், நவகிரக சன்னதியில் ராகு பகவானுக்கு உளுந்து வைத்து வலம் வருவதும் நல்லது. ராகு தோஷ பரிகாரமாக துர்க்கை வழிபாட்டை 9 வாரங்கள் அல்லது 48 நாட்கள் தொடர்ந்து செய்வது மிகுந்த பலன் தரும் என்று கூறப்படுகிறது.

சற்று முன்