நமக்கு கிடைக்கக்கூடிய நாட்டு காய்கறிகளில் அதிக அளவு சத்துக்கள் இருக்கிறது என்பதால் நாம் அதிகளவில் நாட்டு காய்கறிகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட நாட்டு காய்களில் ஒன்றாக திகழ்வதுதான் கோவக்காய். இந்த கோவக்காயை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும், சரும பிரச்சனைகள் தீரும், சிறுநீரக கற்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். இப்படி கூறிக்கொண்டே போகலாம். இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் இருக்கிறது என்பதால் அனைவரும் உண்ண வேண்டிய முக்கியமான ஒரு காயாக இந்த காய்த் திகழ்கிறது. இந்த காயை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் துவையலாக எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
கோவைக்காய் – 200 கிராம்
வேர்க்கடலை – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 6
பூண்டு – 3 பல்
தக்காளி – 2
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றரை டீஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சை வேர்கடலையை சேர்த்து வறுக்க வேண்டும். ஒரு நிமிடம் வறுத்தப்பிறகு இதில் பச்சை மிளகாய் மற்றும் புளியை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதே கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து மீதம் இருக்கக்கூடிய எண்ணெயை ஊற்றி அதில் தோலுரித்த பூண்டை போட வேண்டும். பூண்டு லேசாக வதங்கியதும் சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் கோவக்காயை அதில் சேர்த்து இதனுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியையும் போட்டு மூடி போட்டு எட்டிலிருந்து பத்து நிமிடம் நன்றாக வேக விட வேண்டும்.
நடுவில் அவ்வப்பொழுது மூடியை திறந்து கரண்டியை வைத்து கலந்து விட வேண்டும். அப்பொழுதுதான் அது அடி பிடிக்காமல் இருக்கும். தண்ணீர் ஊற்றி வேக வைக்க தேவையில்லை. தக்காளியில் கோவக்காயிலும் இருக்கக்கூடிய நீர்ச்சத்தே போதுமான அளவாக இருக்கும். கோவக்காய் நன்றாக வெந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
இது ஆரிய பிறகு நாம் ஏற்கனவே மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து வைத்திருந்த வேர்க்கடலை இருக்கிறது அல்லவா அதனுடன் வதக்கிய இந்த கோவக்காயையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக துவையல் பதத்திற்கு அரைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான கோவக்காய் துவையல் தயாராகிவிட்டது. இந்த கோவக்காய் துவையலை சூடாக இருக்கக்கூடிய சாதத்துடன் சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளவும் இந்த துவையல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: கொண்டைக்கடலை மோர் குழம்பு
அதிக அளவு மருத்துவ குணம் மிகுந்த கோவக்காயை பலரும் கூட்டு, பொரியல் என்று தான் அதிக அளவில் செய்வார்கள். அப்படி செய்யும் பொழுது பலரும் அதை ஒதுக்கி வைப்பார்கள். இப்படி துவையல் செய்யும் பொழுது யாருமே ஒதுக்காமல் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.