நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நல்ல விதமாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பான முறையில் பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். இவர்கள் இருவரின் அருளையும் நாம் பெற்றுவிட்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்று கூறலாம். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கும் பலவிதமான யோகங்களை பெறுவதற்கும் இவர்கள் இருவருமே காரணமாக திகழ்கிறார்கள். அப்படிப்பட்ட பெருமாளை எந்த முறையில் வழிபட்டால் யோகமான வாழ்க்கையை வாழ முடியும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்ப்போம்.
யோகம் தரும் வழிபாடு
ஒவ்வொருவருடைய ஜாதகமும் ஒவ்வொரு விதமான யோகத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கும். ஏதாவது ஒரு யோகத்தின் பெயரால் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் வாய்ப்புகளும் இருக்கும். அதே சமயம் ஒரு சிலருக்கு எவ்வளவு தான் நல்ல வாய்ப்புகள் கைக்கு வந்தாலும் அது கைநழுவி சென்று மிகப்பெரிய சோகத்திலேயே மூழ்கி இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆடி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்தால் கண்டிப்பான முறையில் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும்.
இந்த வழிபாட்டை ஜூலை மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இருந்து இரவு 11 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் கூறலாம். ராகுகால எமகண்ட நேரத்தை தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இந்த வழிபாட்டை நம்முடைய வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளுக்கும் செய்யலாம் அல்லது அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்றும் செய்யலாம். சனிக்கிழமை என்றாலே அது பெருமாளுக்கு உரிய கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். அதனால் கண்டிப்பாக முறையில் பெருமாளுக்கு துளசி மாலையை வாங்கி தருவது அல்லது சாற்றுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
வீட்டு பூஜை அறையில் இந்த வழிபாட்டை செய்பவர்கள் பெருமாளுக்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும். அதில் போடக்கூடிய திரி மஞ்சள் நிற திரியாக இருக்க வேண்டும். பிறகு கையில் வாசனை மிகுந்த மலர்கள், துளசி இலைகள் போன்றவற்றை வைத்துக்கொண்டு பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 48 முறை கூறவேண்டும். 48வது முறை கூறும் பொழுது கையில் இருக்கக்கூடிய மலர்களையும் துளசி இலைகளையும் பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது பெருமாளுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய இனிப்பு பொருட்களை வைப்பது மிகவும் சிறப்பு.
ஒருவேளை ஆலயத்திற்கு சென்று இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் கருடாழ்வாரிடம் வாழ்க்கையில் இருக்கும் சங்கடங்கள் அனைத்தும் நீங்கி யோகங்கள் உண்டாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதமாக துளசி இலைகளை வாங்கிக் கொண்டு பெருமானின் ஆலயத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். பிறகு கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு பிரசாதமாக கொடுத்த துளசி இலைகளை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை நாற்பதெட்டும் முறை கூறலாம்.
மந்திரம்
“ஓம் ஸ்ரீஹரி போற்றி ஓம்”
இதையும் படிக்கலாமே: வட்டி பிரச்சனையை தீர்க்கும் சனிக்கிழமை கரிநாள்
சிறப்பு மிகுந்த எளிமையான இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையோடு பெருமாளை நினைத்து ஆடி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை கூறுபவர்களுக்கு பெருமாளின் பரிபூரண அருளால் அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.