ஜூலை மாதம் 28ஆம் தேதி திங்கட்கிழமை அன்று ஆடி மாதத்தின் பூர நட்சத்திரம் வருகிறது. இது ஆடிப்பூரம் என்று அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடுவார்கள். அதே நாள்தான் சதுர்த்தி திதியும் வருகிறது. ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய சதுர்த்தியை நாம் நாகச் சதுர்த்தி என்று கூறுகிறோம். அன்றைய தினத்தில் செய்யக்கூடிய வழிபாடு நாகதோஷத்தை முற்றிலும் நீக்கும். நாகதோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் விலக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த நாகசதுர்த்தி வழிபாட்டை மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்
நாக சதுர்த்தி சிறப்பு வழிபாடு
சதுர்த்தி திதி என்பது விநாயகருக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. இருப்பினும் ஆடி மாதத்தில் வரக்கூடிய சதுர்த்தியை நாம் நாக சதுர்த்தி என்று கூறுகிறோம். நாகம் தன்னுடைய தோஷத்தை நீக்கிய நாளாக தான் இந்த நாகசதுர்த்தி திகழ்கிறது. அதனால் அன்றைய தினத்தில் நாம் நாகநாதரை வழிபாடு செய்யும்பொழுது நாகத்தால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. பலருக்கும் நாக தோஷம் இருப்பதால் திருமணம் தள்ளிப் போகும் சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்டவர்களும் நாக தோஷத்தால் வேறு ஏதாவது பாதிப்பிற்கு ஆளாகி இருப்பவர்களும் நாகசதுர்த்தியை தவறவிடாமல் வழிபாடு செய்ய வேண்டும்.
திங்கட்கிழமை அன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக தலைக்கு குளித்து முடித்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த ஆலயத்தில் பாம்பு புற்று இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் விநாயகருக்கு ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றுங்கள். அடுத்ததாக விநாயகருக்கு பக்கத்தில் ராகு கேது என்று நாகநாதர் சிலைகள் இருக்கும். அதற்கும் நாம் நம் கை பட தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு மஞ்சள் குங்குமம் மலர்கள் போன்றவற்றை வைத்து முழு மனதோடு வழிபாடு செய்ய வேண்டும். பிறகு விநாயகருக்கு முன்பாக அருகம்புல்லை வைத்து ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக புற்று இருக்கும் இடத்திற்கு சென்று புற்றை சுத்தம் செய்ய முடியும் என்னும் பட்சத்தில் அதை சுத்தம் செய்து அதை சுற்றி மஞ்சள் தூளை தூவ வேண்டும். சுத்தம் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை பாம்பு புற்றை சுற்றி மஞ்சளை தூவிக்கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் பாலை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நன்றாக நுணுக்கி அதையும் புற்றை சுற்றி தூவி விடுங்கள். இவ்வாறு செய்து முடித்துவிட்டு அங்கேயே ஒரு ஓரமாக அமர்ந்து “அறிந்தும் அறியாமலும் நாக இனத்திற்கு ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அந்த தவறுகள் நீங்கி அதனால் ஏற்பட்ட தோஷங்கள் விலக வேண்டும்” என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு வீடு திரும்பும் பொழுது விநாயகருக்கு முன்பாக வைத்திருந்த அருகம்புல்லில் சிறிதளவு எடுத்துக்கொண்டு வரவேண்டும். அதேபோல் அன்றைய தினத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்ய வேண்டும். வீட்டிற்கு எடுத்து வந்த அருகம்புல்லை நன்றாக காய வைத்து பொடி செய்து வீடு முழுவதும் தூபம் போட்டு காட்ட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாகதோஷம் மட்டுமல்லாமல் ராகு கேதுவால் ஏற்பட்ட தோஷங்களும் முற்றிலும் நீங்கும். தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகளும் விலகும்.
இதையும் படிக்கலாமே: குடும்ப சுபிட்சத்தை அதிகரிக்கும் ஆடிப்பூர தீபம்
பலவிதமான தோஷங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தோஷத்தை நீக்குவதற்கும் ஒவ்வொரு விதமான வழிப்பாட்டு முறைகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. அந்த வகையில் நாக தோஷத்தை நீக்குவதற்கு நாகசதுர்த்தி நாளன்று இப்படி எளிமையான முறையில் வழிபாடு செய்தால் போதும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.