ஆஞ்சநேயர் என்றும் சிரஞ்சீவி என்ற அந்தஸ்தை பெற்றவராக திகழ்கிறார். உண்மையான பக்தன் என்ற பெயரையும் பெற்றவராக தான் ஆஞ்சநேய திகழ்கிறார். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை முழுமனதோடு உண்மையாக நாம் வழிபாடு செய்தோம் என்றால் அவர் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றி விடுவார் என்று கூறப்படுகிறது. அதிலும் ஸ்ரீ ராமஜெயம் என்று கூறினாலேயே ஆஞ்சநேயரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிடும். அப்படிப்பட்ட ஆஞ்சநேயருக்கு பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் பதினொரு நாட்கள் மட்டும் அவரை நினைத்து நாம் செய்யக்கூடிய ஒரு வழிபாடு நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒரு காரியம் நடந்திட வேண்டும் அதில் எந்தவித தடைகளும் வரக்கூடாது அதையும் மீறி தடைகள் வந்தாலும் அந்த தடைகள் உடனே தவிடு பொடியாக வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் ஆஞ்சநேயரை நாம் வழிபாடு செய்யலாம். ஆஞ்சநேயரை செந்தூரம் சாற்றி வழிபாடு செய்வது, வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்வது, வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்வது, வடைமாலை சாற்றி வழிபாடு செய்வது என்று பலவிதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட வழிபாட்டு முறைகளில் ஒன்றை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பித்து தொடர்ச்சியாக 11 நாட்கள் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை நாம் இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பித்தோம் என்றால் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை 11 நாட்கள் பூர்த்தி அடையும். 12வது நாளான சனிக்கிழமை அன்று மட்டும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றால் போதும். மற்ற நாட்களில் வீட்டிலிருந்தே நாம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யலாம். எங்கள் வீட்டில் ஆஞ்சநேயரின் படம் சிலை எதுவும் இல்லையே, அவரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் வழக்கமும் எங்களுக்கு இல்லையே என்று நினைப்பவர்கள் கூட இந்த வழிபாட்டை முழுமனதோடு செய்யலாம்.
இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரே ஒரு நெய் தீபமும் ஒரே ஒரு வெற்றிலையும் இருந்தால் போதும். தினமும் ஒரு வெற்றிலை என்ற வீதம் 11 நாட்கள் 11 வெற்றிலை வேண்டும். தினமும் புதிதாக நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதே விளக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் ஆஞ்சநேயரின் படம் சிலை இருக்கும் பட்சத்தில் அவருக்கு தினமும் சந்தனம் குங்குமம் வைத்து மலர்களை சாட்சி அவருக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து நெய்வேத்தியமாக கற்கண்டு, நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை போன்ற ஏதாவது ஒரு இனிப்பை வைத்துவிட்டு இந்த வழிபாட்டை செய்தால் போதும்.
சிலை படம் இல்லாதவர்கள் அவரை மனதார நினைத்து நெய் தீபம் ஏற்றி வைத்து இனிப்பை நிறைவேத்தியமாக வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு ஒரு வெற்றிலை வேண்டும் என்று சொன்னேன் அல்லவா? கிழியாத நல்ல நிலையில் பச்சை பசேல் என்று இருக்கக்கூடிய ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் நாம் சந்தனத்தை பயன்படுத்தியோ அல்லது செந்தூரத்தை பயன்படுத்தியோ நம்முடைய வேண்டுதலை எழுத வேண்டும். முதலில் ஸ்ரீ ராமஜெயம் என்று எழுதிக் கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய வேண்டுதலை மிகவும் எளிமையான முறையில் இரண்டு வார்த்தைகள் போல எழுத வேண்டும்.
உதாரணமாக நல்ல வேலை, குடும்பத்தில் மகிழ்ச்சி, குழந்தை பாக்கியம், பணவரவு, திருமணம் என்று நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தி உங்களுடைய வேண்டுதலை மிகவும் சுருக்கமாக இரண்டு வார்த்தைகளில் எழுத வேண்டும். பிறகு அந்த வெற்றிலையை கையில் வைத்துக்கொண்டு “ஸ்ரீ ராமஜெயம்” அல்லது “ராம் ராம்” என்றோ பத்து நிமிடம் கண்களை மூடி கூற வேண்டும். பிறகு நாம் தீபம் வைத்திருந்தோம் அல்லவா? அந்த தீபத்திற்கு பின்புறமாக இந்த வெற்றிலையை மடித்து வைத்து விடுங்கள்.
இதே போல் 11 நாட்களும் நாம் செய்ய வேண்டும். 12 வது நாள் அதாவது அடுத்த வாரம் சனிக்கிழமை அன்று வேண்டுதல் எழுதி வைத்திருக்கும் இந்த 11 வெற்றிலைகளையும் எடுத்துக்கொண்டு அருகில் ஆஞ்சநேயர் எந்த ஆலயத்தில் இருக்கிறாரோ அங்கு சென்று அவருடைய பாதத்தில் வைத்துவிட்டு அவருக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து முழுமனதோடு என்னுடைய வேண்டுதலையின் நிறைவேற்றுங்கள் என்று கூறி வழிபாடு செய்து விட்டு அங்கேயே அமர்ந்து பத்து நிமிடம் ராம நாமத்தை உச்சரித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இந்த முறையில் ஆஞ்சநேயரை 11 நாட்கள் நினைத்து வழிபாடு செய்பவர்கள் ஒரே வேண்டுதலை தான் முன்வைக்க வேண்டும். அசைவத்தை தவிர்க்க வேண்டும். சுத்த பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: துன்பங்களை தீர்க்கும் குரு பஞ்சமி
சக்தி வாய்ந்த தெய்வங்களுள் ஒருவராக திகழக்கூடிய ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலம் பலவிதமான கர்ம வினைகள் நம்மை விட்டு நீங்கும். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை தொடர்ச்சியாக 11 நாட்கள் இப்படி வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.