விரதங்களிலேயே மிகவும் உயரிய விரதமாக திகழ்வது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி என்று இரண்டு முறை வரும். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய இரண்டு திதிகளிலும் நாம் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது, வழிபாடு செய்வது போன்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நம் வாழ்வில் நாம் எதிர்பார்க்காத பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பெருமாளுக்கு உரிய திதியான ஏகாதசி திதி அன்று பெருமாளுக்குரிய மாதமான புரட்டாசி மாதம், பெருமாளுக்குரிய கிழமையான புதன்கிழமை அன்று பிறக்கிறது. இது மிகப்பெரிய அற்புதமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய எளிமையான வழிபாட்டு முறையைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்ப்போம்.
புரட்டாசி மாத ஏகாதசி வழிபாடு
செல்வ செழிப்பிற்கு அதிபதியாகவும் நாம் வாழுகின்ற வாழ்க்கையில் நமக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தரக்கூடிய தெய்வமாகவும் திகழக்கூடியவர் பெருமாள் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட பெருமாளை வழிபாடு செய்வதற்கு சனிக்கிழமை எந்த அளவிற்கு உகந்ததோ அதேபோல்தான் புதன்கிழமையும் உகந்த நாளாக திகழ்கிறது. மேலும் பெருமாளுக்கு உகந்த திதியாக ஏகாதசி தித் திகழ்கிறது. அதேபோல் பெருமாளுக்கு உகந்த மாதமாக எப்படி மார்கழி மாதம் திகழ்கிறதோ அதே போல் தான் புரட்டாசி மாதமும் திகழ்கிறது. இந்த முறை புரட்டாசி மாதம் புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய ஏகாதசி திதியில் பிறக்கிறது. இந்த நாளில் செய்ய வேண்டிய பெருமாள் வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
அன்றைய தினம் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்து கொள்ள வேண்டும். வீட்டு பூஜை அறையில் பெருமாளின் படத்திற்கு முன்பாக ஐந்து அகல் விளக்குகளை வைத்து அதில் நெய்யுற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றி வைத்துவிட்டு பெருமாளுக்கு துளசி மாலையை சாற்றி முழு மனதோடு ஏகாதசி விரதத்தை தொடங்க வேண்டும். விரதம் இருக்க இயன்றவர்கள் அன்றைய தினம் விரதம் இருக்கலாம். விரதம் இருக்க இயலாதவர்கள் எளிமையான உணவுகளை உண்டு பெருமாளின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம்.
பெருமாளுக்குரிய வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், 9:15 இல் இருந்து 10:15க்குள், 10:45 இல் இருந்து 11:45க்குள், மாலை 5:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து வழிபாட்டை செய்யலாம். வீட்டில் பெருமாளின் அம்சம் பொருந்திய எந்த பொருட்கள் இருந்தாலும் அந்த பொருட்களுக்கு இந்த நேரத்தில் பாலபிஷேகம் செய்வது என்பது மிகவும் சிறப்பு. பெருமாளின் அம்சம் கொண்ட பொருட்கள் எதுவும் இல்லை என்னும் பட்சத்தில் பெருமானின் படத்திற்கு முன்பாகவே இந்த வழிபாட்டை செய்யலாம்.
இந்த வழிபாட்டை செய்யக்கூடிய நேரத்திலும் நாம் ஐந்து நெய் தீபங்களை ஏற்றி வைத்து கொள்ள வேண்டும். பெருமாளுக்கு காய்ச்சிய பால், செவ்வாழை போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு துளசி இலைகளையும் வாசனை மிகுந்த மலர்களையும் வைத்துக் கொண்டு பெருமானின் மந்திரமான “ஓம் நமோ வெங்கடேசாய நமஹ” என்னும் மந்திரத்தை 111 முறை கூறி அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த முறையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது பெருமாள் மட்டுமல்லாமல் பெருமானின் துணைவியான மகாலட்சுமியும் நம் வீடு தேடி வந்து நமக்கு அருளாசி புரிவார்கள்.
இதையும் படிக்கலாமே: சகல செல்வங்களைத் தரும் அருகம்புல் மாலை
சகல செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய பெருமாளை நம் வீடு தேடி வரவழைப்பதற்கு செய்யக்கூடிய மிகவும் எளிமையான ஒரு வழிபாட்டை முழு மனதோடு செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.