புரட்டாசி மாதத்தின் மகாலய பட்ச நாட்கள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி மகாளய அமாவாசை. மொத்தமாக 15 நாட்கள் மகாளய பட்சம். பதினாறாவது நாள் அமாவாசையோடு சேர்த்து இந்த முன்னோர்கள் வழிபாடானது நிறைவடையும். இந்த மகாளய பட்சத்தில் கடைசி மூன்று நாட்கள், நாளையில் இருந்து துவங்குகிறது.
அதாவது வெள்ளி சனி, ஞாயிறு. 19, 20, 21 இந்த மூன்று தேதிகளில் உங்களுடைய வீட்டில் நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு, கோவிலில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் உங்கள் குடும்பத்தில் இருக்கும் 16 தலைமுறை சாபங்கள் நீங்கி உங்கள் குடும்பத்திற்கு 16 வகையான செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தீராத துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் இருக்கக்கூடிய குடும்பத்தினர் கட்டாயம் இதை செய்ய வேண்டும். இந்த சிறு பரிகாரத்தை செய்தாலே பெரிய அளவில் குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். காரியத்தடை விலகும். சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும் என்பது நம்பிக்கை. சரி அந்த பரிகாரத்தை எப்படி செய்வது? குலதெய்வத்தை மனதில் நினைத்து இந்த பதிவினை தொடர்ந்து படிக்க துவங்குங்கள்.
இந்த பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்னாடி இன்னொரு முக்கியமான விஷயம். இந்த மூன்று நாட்களும் அதிக கோபம் வேண்டாம். வீட்டில் தகராறு செய்து கொள்ளாதீர்கள். யாரோடும் வாக்குவாதம் செய்யாதீர்கள் அமைதியாக மனதில் இறைவனை மட்டும் வழிபாடு செய்யுங்கள்.
மஹாளய பட்சம் கடைசி மூன்று நாள் பரிகாரம்
மகாளய பட்சத்தில் இந்த கடைசி மூன்று நாளும் நீங்கள் அதிகாலை வேலையிலேயே எழுந்து குளித்து விட வேண்டும். நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பு காலை ஒரு முறை காகத்திற்கு ஏதாவது ஒரு உணவு வையுங்கள். பிஸ்கட் மிக்சர் எது போட்டாலும் தவறு கிடையாது. பிறகு மதியம் சமைத்த உணவிலிருந்து சுடு சாதம் எடுத்து அதில் கொஞ்சம் நெய் விட்டு உப்பு போட்டு முடிந்தால் கருப்பு எள்ளு துவி கொண்டு போய் அதை காகத்திற்கு வையுங்கள். காகத்திற்கு வைக்கும் போது முன்னோர்களையும் குலதெய்வத்தையும் மனமுருக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் இது முதல் விஷயம்.
இரண்டாவது உங்களுடைய வீட்டில் பூஜை அறை தவிர வேறு எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் சரி, ஒரு மண் அகல் விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு, இந்த விளக்கு என்னுடைய முன்னோர்களுக்காக, முன்னோர்களை நாங்கள் மறக்கவில்லை என்பதற்காக என்று சொல்லி அந்த விளக்கை ஏற்றி அந்த தீபச்சுடரில் மறைந்த எல்லா முன்னோர்களையும் அழைத்து வீட்டிற்குள் அமர வைத்து, வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
மூன்று நாட்களும் இந்த விளக்கை ஏற்ற வேண்டும் காலை அல்லது மாலை எந்த நேரத்தில் ஏற்றினாலும் தவறு கிடையாது. ஒரு மணி நேரம் இந்த தீபம் உங்கள் வீட்டில் எறிந்தால் போதும். உங்களுடைய சௌகரியத்திற்கு ஏற்ப எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த தீபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் இது இரண்டாவது விஷயம்.
மூன்றாவதாக இந்த மூன்று நாட்களுமே நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்று அந்த ஈசனை வழிபாடு செய்ய வேண்டும். கோவிலில் அமர்ந்து முன்னோர்களையும் குலதெய்வத்தையும் நினைத்து ஐந்து நிமிடம் தியானம் செய்ய வேண்டும். எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை, முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதில் ஏதேனும் தவறு நடந்திருந்தால் எங்களை மன்னித்து விடுங்கள்.
எங்களுடைய முன்னோர்களோ அல்லது நாங்களோ எங்களுடைய முன்னோர்களுக்கு அதாவது எங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களுக்கு அறிந்தோ அறியாமலோ ஏதேனும் தீமை செய்து இருந்து பாவங்களை சேர்த்து இருந்தால், அதற்கான மன்னிப்பையும் கேட்டுக் கொள்ளுங்கள்.
அந்த சிவன் கோவிலில் இரண்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு பிரார்த்தனை செய்து கொண்டு உங்களால் முடிந்த உழவாரப் பணியை அந்த சிவன் கோவிலில் மேற்கொள்ள வேண்டும். சிவன் கோயிலை சுற்றி குப்பையாக இருக்குதா? ஒரு தொடப்பத்தை எடுத்து கூட்டி சுத்தம் செய்யுங்கள். விளக்கேற்றும் இடம் எண்ணெய் கறையாக இருக்கா. அந்த இடத்தை துடைத்து சுத்தம் செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே: வேண்டுதலை நிறைவேற்றும் முருகர் வழிபாடு
ஒட்டடையாக இருந்தால் அந்த கோவிலை ஒட்டடை அடித்து சுத்தம் செய்யுங்கள். உங்களால் முடிந்த உழவாரப்பணியை சிவன் கோவிலுக்கு மூன்று நாளில் ஏதாவது ஒரு நாள் செய்தால் கூட போதும். மேலே சொன்ன இந்த மூன்று விஷயங்களை பின்பற்றினால் போதும் இந்த மூன்று நாட்களில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கெடுதல் அனைத்தும் விலகும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.