சப்பாத்தியில் நிறைய வகைகள் உண்டு. விதவிதமாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வெரைட்டியாக சப்பாத்தியை செய்யலாம். அந்த வரிசையில் மிக மிக சுலபமான முறையில் உருளைக்கிழங்கு சேர்த்து ஒரு மசாலா சப்பாத்தி ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இந்த சப்பாத்தியை செஞ்சுட்டு ஒரே ஒரு தேங்காய் சட்னியை சைட் டிஷ்ஷாக வைத்தால் கூட போதும். சூப்பரா இருக்கும். ஒரு முறை இந்த சப்பாத்தியை உங்கள் வீட்டில் செய்து விட்டால், இதே சப்பாத்திதான் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்கள் அடம்பிடிப்பார்கள். அந்த அளவிற்கு சுவைமிகுந்த ரெசிபியை நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா.

முதலில் 2 உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும். கிராம் கணக்கில் 150 கிராம் உருளைக்கிழங்கு. அரைத்த உருளைக்கிழங்கில், அரைபடாமல் உருளைக்கிழங்கு துண்டுகள் இருக்கக்கூடாது. சப்பாத்தி தேய்க்கும் போது நமக்கு தட்டுப்படும். (வேக வைக்காமல் பச்சையாக இருக்கக்கூடிய உருளைக்கிழங்கை தான் விழுதாக அரைக்க போகின்றோம். அரைத்த விழுது அப்படியே இருக்கட்டும்.)
அடுத்தபடியாக ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு – 2 கப், தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் – 1/2 அரை ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை இவைகளைப் போட்டு, முதலில் நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு விழுதை சப்பாத்தி மாவில் ஊற்றி, முதலில் நன்றாக பிசைந்து விடுங்கள். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பிசைந்து கொள்ள வேண்டும்.

இந்த சப்பாத்தி மாவின் மேல் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தடவி, ஒரு மூடி போட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்தால் போதும். சப்பாத்தி மாவில் எண்ணெய் ஊற்றி பிசைய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மேலே வறண்டுபோகாமல் இருக்க எண்ணெய் தடவி மூடி வைக்க வேண்டும்.
மாவு நன்றாக ஊறிய பின்பு, மீண்டும் 2 நிமிடம் அந்த சப்பாத்தி மாவை பிசைந்து கொடுங்கள். அதன் பின்பு உங்களுடைய தேவைக்கு ஏற்ப எந்த சைஸில் சப்பாத்தி வேண்டுமோ, அந்த அளவில் சப்பாத்தி மாவை உருண்டை பிடித்துக் கொள்ளவும். சப்பாத்தி கட்டையில் எப்போதும்போல மாவை தூவி, ஒரு உருண்டையை எடுத்து வைத்து பூரியை விட சிறிய வட்டத்தில் தேய்த்து, அந்த மாவின் நடுவே 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சப்பாத்தியை நான்காக மடித்து மீண்டும் சப்பாத்தியுடைய ஓரங்களில் தேய்க்க தொடங்குங்கள்.

இப்படி நான்காக மடித்து சப்பாத்தியை தேய்க்கும்போது, சப்பாத்திக்கு உள்ளே எண்ணெய் ஊற்றி தேய்க்கும்போது, சப்பாத்தி சுட்டு எடுத்தால் நமக்கு லேயர் லேயராக கிடைக்கும். சப்பாத்தியை தேய்த்து விட்டீர்கள். சப்பாத்தியை சுட்டு எடுக்கலாம்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து கொள்ளவேண்டும். சூடு செய்த தோசை கல்லில் சப்பாத்தியை போட்டு இரண்டு பக்கம் திருப்பி திருப்பி விட வேண்டும். எண்ணெய் எதுவும் ஊற்றக்கூடாது. சப்பாத்தி கல்லில் நன்றாக வெந்து தானாகவே உப்பி எழும். சப்பாத்தி நன்றாக வெந்து வந்தவுடன், சப்பாத்திக்கு மேலே எண்ணெய் அல்லது நெய்யை தடவி இரண்டு முறை திருப்பி போட்டு அப்படியே எடுத்து சுட சுட பரிமாறுங்கள். அட்டகாசமான சாப்டான மசாலா சப்பாத்தி தயார்.