கன்னியாகுமரி நாகர்கோவில் பக்கம் இந்த இஞ்சி தீயல் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. எல்லோர் வீட்டிலும் கட்டாயமாக இந்த இஞ்சி தீயல் இருக்கும். இதை பக்குவமாக செய்து வைத்துக் கொண்டால், ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த இஞ்சி தீயலை சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ள சாப்பிடலாம். வயிற்றில் உள்ள அத்தனை பிரச்சினைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். மிஸ் பண்ணாம உங்க வீட்ல வாரத்துக்கு ஒருமுறை இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க. சரி, வாங்க அந்த ரெசிப்பியை பார்க்கலாம்.

முதலில் 1/4 கிலோ அளவு இஞ்சியை எடுத்து தோல் சீவி நன்றாக தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கியோ அல்லது ஒன்று போல சீவி வைத்துக் கொள்ள வேண்டும். (இஞ்சியை எண்ணெயில் போட்டு வதக்கும்போது, எல்லா இஞ்சியும் ஒருசேர சிவந்து வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கேற்றாற்போல் இஞ்சியை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.)
அடுத்தபடியாக ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவு புளியை தண்ணீரில் போட்டு கரைத்து புளிக்கரைசல், புளிக்குழம்புக்கு எடுப்பது போல எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக 1/2 மூடி தேங்காயைத் துருவி தேங்காய் துருவலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (இப்போது இஞ்சி சீவல், புளிக்கரைசல், தேங்காய்த்துருவல் தயாராக உள்ளது.)

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, துருவி வைத்திருக்கும் இஞ்சியை போட்டு முதலில் சிவக்க வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி சிவப்பு நிறம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு அதே கடாயில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி துருவி வைத்திருக்கும் தேங்காய் துருவலை போட்டு சிவக்க பிரவுன் கலர் வரும் வரை தேங்காயையும் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது வருத்த இஞ்சியையும், தேங்காய் துருவலையும் தனித்தனியாக மிக்ஸி ஜாரில் போட்டு விழுது போல கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். இஞ்சியையும் தேங்காய் துருவலையும் ஒன்றாக போட்டால் அரைப்பதில் சிரமம் இருக்கும்.

அடுத்தபடியாக பாத்திரத்தில் இருக்கும் புளிக்கரைசலில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி விழுதை ஊற்றி விடுங்கள். அதன் பின்பு அரைத்து எடுத்த தேங்காய் விழுதையும் புளிக்கரைசலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த கரைசலுடன் அதாவது புளிக்கரைசல், இஞ்சி விழுது, தேங்காய் விழுது, இந்த மூன்றையும் ஒரு முறை கரண்டியை விட்டு நன்றாக கலந்து விட்டு, இதோடு மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மல்லித் தூள் – 3 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களையும் சேர்த்து கரைத்து குழம்பை கூட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது குழம்பை தாளித்த விடலாம். அடுப்பில் மண் சட்டி அல்லது அடி கனமான கடாயை வைத்து கொள்ளுங்கள். கொஞ்சம் நிறையவே அதாவது 4 லிருந்து 5 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் – 2, போட்டு தாளித்து தயாராக கூட்டி வைத்திருக்கும் குழம்பை அப்படியே கடாயில் ஊற்றி உடனடியாக ஒரு மூடியை போட்டு மூடிவிடுங்கள். அப்போது அந்த இஞ்சி வாசம் வெளியில் போகாமல் இருக்கும்.

பிறகு மூடியை திறந்து குழம்புக்கு தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு, உப்பு காரம் சரிபார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கொள்ளலாம். இந்த குழம்பை பச்சை வாடை போக கொதிக்க வைக்கவேண்டும். நாம் ஊற்றிய எண்ணெய் எல்லாம் மேலே மிதந்து வரும். குழம்பு கொதித்து சுண்டி வரும் போது, அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த இஞ்சி தீயலை சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் ஆஹா என்ன ருசி. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.