இன்னைக்கு மதியம் என்ன லஞ்ச். பீட்ரூட் பொரியல். என்று சொன்னதுமே முகத்தை சுருக்கிக்கொண்டு இன்றைக்கு எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் தான் நிறைய பேர். ஏன் பெரியவர்கள்கூட இந்தக் காயைப் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் பிடித்த மாதிரி பீட்ரூட் பொரியலை நம் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சூப்பராக எப்படி செய்யலாம் என்பதைப் பற்றிய ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.
முதலில் பீட்ரூட் பொரியல் சுவையாக செய்ய ஒரு டிப்ஸ் உள்ளது. அந்த டிப்ஸ் என்ன என்பதை முதலிலேயே தெரிந்து கொள்வோம். எண்ணெயில் பீட்ரூட்டை போட்டு தண்ணீர் தெளித்து வேக வைக்கக்கூடாது. எண்ணெயிலேயே வதக்கி, அடுப்பை சிம்மில் வைத்து வேக வைத்தால் பீட்ரூட் பொரியலின் சுவை அதிகரிக்கும். சரி முழுமையாக இந்த ரெசிபியை தெரிந்து கொள்வோமா.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், பொடியாக துருவிய பூண்டு பல் – 5, கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவேண்டும். அடுத்த படியாக சின்னதாக இருக்கும் பெரிய வெங்காயம் – 1, நீளவாக்கில் வெட்டி போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியவுடன் மீடியம் சைஸில் இருக்கும் 2 பீட்ரூட்டை மிகப் பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து 2 நிமிடம் எண்ணெயிலேயே நன்றாக வதக்கி விடுங்கள். அதன் பின் தேவையான அளவு உப்பு போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து விட்டால் அந்த உப்பிலிருந்து லேசாக தண்ணீர் விட்டு எண்ணெயிலேயே பீட்ரூட் 10 நிமிடங்கள் வதக்கி வேக வேண்டும்.
ஒரு மூடியைப் போட்டு பீட்ரூட்டை 10 நிமிடங்கள் வேக வைத்தாலே பீட்ரூட் பக்குவமாக வெந்து வந்துவிடும். ஆனால் 2 நிமிடத்திற்கு ஒருமுறை இடையிடையே மூடியை திறந்து கிளறி விட வேண்டும் என்பதும் குறிப்பிடதக்கது. அப்படியே மூடி போட்டு பீட்ரூட்டை கடாயில் 10 நிமிடமும் விட்டுவிட்டால், பீட்ரூட் அடி பிடிக்கும்.
பீட்ரூட் நன்றாக வெந்து வந்தவுடன் 1/2 ஸ்பூன் மிளகாய் தூளை சேர்த்து, பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கி விட்டு, இறுதியாக 2 ஸ்பூன் தேங்காய் துருவலை போட்டு கலந்து உடனடியாக அடுப்பை அனைத்து விடுங்கள். அவ்வளவு தான் சுடச்சுட சூப்பரான பீட்ரூட் பொரியல் தயார். சில ஹோட்டலில் சென்றால் பீட்ரூட் பொரியல் அருமையான சுவையில் இருக்கும். ஹோட்டலில் பீட்ரூட் பொரியல் சுவைப்பதற்கு காரணம் அதில் தண்ணீர் ஊற்றி வேக வைக்க மாட்டார்கள். எண்ணெயில் வதக்கி செய்யும்போது. உங்களுக்கு நல்ல சுவை கிடைக்கும். மிஸ் பண்ணாம உங்க வீட்ல இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.