5 மிளகு இருந்தால் எதிரி வீட்டில் கூட விருந்து உண்ணலாம் என்பது பழமொழி. இவ்வாறு மிளகிற்க்கு அவ்வளவு அற்புதமான சக்தி இருக்கிறது. விஷத்தை முறிக்கும் திறன் பெற்றது இந்த மிளகு. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சளி பிடித்தாலும் மிளகு ரசம் வைத்து கொடுத்தால் போதும். சளி இருந்த இடம் தெரியாமல் போய் விடும். உடல் சோர்வாக இருந்தாலும் அல்லது காய்ச்சலாக இருந்தாலும், சளிப் பிடித்திருந்தாலும் மிளகு சேர்த்து ரசம் வைத்து சாதம் கொடுப்பது தான் அனைவரது வீட்டிலும் வழக்கம். அப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் இந்த ரசம் சாதத்தை கலவை உணவாகவும் செய்திட முடியும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
அரிசி – ஒரு கப், தனியா – 2 ஸ்பூன், துவரம்பருப்பு – இரண்டு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், தக்காளி – 3, புளி – நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் – 3, வர மிளகாய் – 2, பூண்டு – 3 பல், கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி.
செய்முறை:
முதலில் ஒரு கப் அரிசியை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 2 ஸ்பூன் துவரம் பருப்பு சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றை இரண்டு, மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாகக் கழுவி கொள்ள வேண்டும். பிறகு இதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.
பின்னர் 3 தக்காளியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, நன்றாக கரைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தனியா, மிளகு, சீரகம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்து மற்றும் 2 வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்க்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக வெந்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் இவற்றுடன் ஊற வைத்துள்ள அரிசி, துவரம் பருப்பை சேர்க்க வேண்டும். பிறகு ஒரு கப் அரிசிக்கு நான்கிலிருந்து ஐந்து கப் தண்ணீர் ஊற்றி, நன்றாக கலந்துவிட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி, குக்கரை மூடி, விசில் போட்டு 4 விசில் வரும் வரை வேக வைத்தால் போதும். சுவையான ரசம் சாதம் தயாராகிவிடும்.