உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். உருளைக்கிழங்கை வைத்து எந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தாலும் அதை விருப்பமாக சாப்பிடுவார்கள். சுவையான சூப்பரான ஆரோக்கியமான உருளைக்கிழங்கு வடை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சாயங்கால நேரத்தில் டீ போடும் போது இந்த ஸ்நாக்ஸை சுலபமாக செய்து விடலாம். நேரத்தைக் கடத்தாமல் ரெசிபிகுள் போவோமா.
முதலில் 1/2 கிலோ அளவு உருளைக்கிழங்கை சுத்தமாக கழுவி விட்டு, குக்கரில் போட்டு இரண்டிலிருந்து மூன்று விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
மசித்த இந்த உருளைக்கிழங்குடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லி தழை புதினா பொடியாக வெட்டியது – 1/2 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, சோம்பு – 1 ஸ்பூன், கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, இந்த எல்லா பொருட்களையும் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம்.
வடை விடுவதற்கு தேவையான மாவு நமக்கு கிடைத்திருக்கும். உங்களுக்கு கூடுதலாகக் காரமும், வாசமும் தேவை என்றால் ஒரு ஸ்பூன் கரம் மசாலா கூட இந்த மாவோடு சேர்த்து பிசைந்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். மாவை நன்றாக பிசைந்து விட்டு கையை கழுவிக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ள வேண்டும்.
முதலில் உங்களுடைய கையை தண்ணீரில் நனைத்து அல்லது எண்ணெயில் தொட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்பு மாவை சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டி அப்படியே எண்ணெயில் விட்டு மெதுவாக இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டியது தான். எண்ணெய் அதிகமாக சூடு ஆகக்கூடாது. மிதமான தீயில் இருக்கும் போதுதான் இந்த வடையைப் போட்டு பொரித்து எடுக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணெய் ரொம்பவும் காய்ந்து விட்டால் வடை போட்டதுமே கருகிவிடும்.
சுட சுட இந்த வடையை டொமேடோ சாஸ் தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் தேங்காய் சட்னியோடு பரிமாறலாம். இல்லை என்றால் எதுவுமே தொட்டுக் கொள்ளாமல் அப்படியே சாப்பிட்டாலும் மிகமிக சுவையாகத்தான் இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாதீங்க இன்னைக்கு ஈவினிங் உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க.