ஆந்திரா பக்கங்களில் ஹோட்டல்களில் சென்று சாப்பிட்டால் இந்த காரப்பருப்பு பொடி இருக்கும். சாம்பார் ஊற்றி சாப்பிடுவதற்கு முன்பாக சுட சுட வெள்ளை சாதத்தில் இந்த பொடியை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். பெரும்பாலும் ஹோட்டல்களில் கிடைக்கக்கூடிய இந்த பொடியின் சுவையை என்னதான் முயற்சித்தாலும் நம் வீட்டில் அரைக்கும் பொடியில் கொண்டு வர முடியாது. பின் சொல்லக்கூடிய அளவுகளில் பருப்பு வகைகளை வறுத்து அரைத்து பொடி செய்து பாருங்கள். ஆந்திரா ஹோட்டலில் கிடைக்கும் அதே சுவையில் கார பருப்பு பொடி நம் வீட்டிலும் கிடைக்கும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, சூடு செய்து கொள்ளுங்கள். அதில் துவரம் பருப்பு – 1 கப், கடலைப்பருப்பு – 1/2 கப், பாசிப்பருப்பு – 1/2 கப், உளுந்து – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 1/2 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வர மிளகாய் – 15, பிறகு தேவையான அளவு உப்பு, பெருங்காயம் – 1/4 ஸ்பூன். இந்த பொருட்கள்தான் நமக்கு தேவை.
வீட்டில் சில்வர் கிண்ணம் ஏதாவது சின்னது இருக்கும் அல்லவா. அதை எடுத்து எல்லா பொருட்களையும் குறைந்த அளவுகளில் அளந்து பொடித்துப் பாருங்கள். பொடியின் சுவை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, தேவைப்பட்டால் அதிக அளவில் இந்த பொருட்களை எல்லாம் வறுத்து அரைத்துக் கொள்ளலாம்.
இந்த எல்லா பொருட்களையும் போட்டு ஒன்றாக வறுத்து விடக்கூடாது. தனித்தனியாக ஒவ்வொரு பொருள்களாக கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். எல்லா பருப்பு வகைகளும் சீராக கோல்டன் பிரவுன் கலரில் வறுபட்டு வந்தால்தான் பொடியின் சுவை அசத்தலாக இருக்கும். ஒவ்வொரு பொருளாக பொறுமையாக போட்டு வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். (பருப்பு வகைகள் சரியாக வருபடவில்லை என்றால் பருப்பு பொடியில் பச்சை வாடை வீசும்.)
உப்பு பெருங்காயத்தை மட்டும் வறுக்க வேண்டாம். வறுபட்ட எல்லா பொருட்களையும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் தேவையான அளவு உப்பு பெருங்காயத்தை போட்டு, இதை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொரகொரப்பாக அரைக்க வேண்டாம். சாதத்திற்கு போட்டு பிசைந்து சாப்பிடுவதால் கொஞ்சம் நைஸ் ஆகவே அரைத்துக் கொள்ளுங்கள். அதாவது 90 சதவிகிதம் இந்த பொடி அரைபட வேண்டும்.
இதை காற்று புகாமல் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது. சுடச்சுட சாதத்தில் இந்த பொடியை போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு அருமையாக இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் பருப்பு வகைகளை சேர்த்து அரைத்து இருப்பதால் இது நல்ல ஆரோக்கியமான உணவும் கூட.
தேவைப்பட்டால் இந்த பொடியில் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். அவசரத்துக்கு இட்லி பொடி இல்லை என்றால் இந்த பொடியும் நன்றாக தான் இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.