ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என்றும் ஆடி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை போன்ற கிழமைகள் அம்மனின் வழிபாட்டிற்குரிய கிழமையாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான வழிபாடுகளை நாம் அம்மனை நோக்கி செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு எந்த முறையில் வழிபாடு செய்ய சுகபோகமான வாழ்க்கை அமையும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை ரோகினி நட்சத்திரம் இருக்கிறது. ரோகிணி என்றாலே அதற்கு சக்கரம் என்று அர்த்தம். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர் கிருஷ்ணர் என்றும் ரோகினியின் அம்சத்தை தன்னுடைய கையில் சுதர்சன சக்கரமாக வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சக்கரம் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமாக பலனை தரும். அம்மனைப் பொருத்தவரை சக்கரம் என்றால் அது ஸ்ரீ சக்கரம் தான்.
அதனால் ஆடி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை ஸ்ரீசக்கரத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்ய பல அற்புதமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கை சொர்க்க மையமாக மாறும் என்று கூறப்படுகிறது. இதற்கு நம்முடைய உள்ளங்கை அளவிற்கு வெள்ளியில் இருக்கக்கூடிய ஸ்ரீசக்கரத்தை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மாலை 6:00 மணிக்கு மேல் ஸ்ரீ சக்கரத்திற்கு பன்னீர், பால் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு பச்சரிசியில் மஞ்சளை கலந்து அட்சத்தையாக தயார் செய்து அதனுடன் மல்லிகை மொட்டுகளை சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அட்சதையும் ஒரு மல்லிகை பூ என்ற வீதம் ஸ்ரீ சக்கரத்திற்கு அம்மனின் 108 நாமங்களை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இதில் இருக்கக்கூடிய பச்சரிசி என்பது சந்திரனையும், மஞ்சள் என்பது குரு பகவானையும், மல்லிகைப்பூ என்பது சுக்கிரனையும் குறிக்கக்கூடியது. இவர்கள் மூவரின் அம்சத்தை கொண்ட பொருட்களை சேர்த்து நாம் ஸ்ரீ சக்கரத்திற்கு அர்ச்சனை செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பசி, பட்டினி, பஞ்சம் போன்ற அனைத்தும் நீங்கும். வாகன யோகம் உண்டாகும். கடன் பிரச்சினை முற்றிலுமாக நீங்கும்.
மேலும் ஸ்ரீசக்கரத்திற்கு வெள்ளை நிறத்தினால் ஆன பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் ஸ்ரீ சக்கரம் இல்லை ஆனால் இந்த வழிபாட்டை செய்து சுகபோகமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம். ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்களில் மிகவும் முக்கியமான கோவிலாக திகழ்வது காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய காமாட்சி அம்மன் கோவில், திருவானைக்காவில் இருக்கக்கூடிய அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில், திருவாரூரில் இருக்கக்கூடிய கமலாம்பிகை கோவில், சமயபுரத்தில் இருக்கக்கூடிய மாரியம்மன் திருமாங்கல்யத்தில் ஸ்ரீ சக்கரம் இருக்கிறது என்பதால் சமயபுரம் கோவிலுக்கு கூட சென்று நாம் வழிபாடு செய்யலாம்.
ஸ்ரீசக்கரத்திற்கு பிரசித்தி பெற்ற கோவில்களாக திகழ்கின்றன என்பதால் இதை நாம் குறிப்பிட்டிருக்கின்றோம். குறிப்பிடப்படாத பல ஆலயங்களில் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்ட்டை செய்து வழிபாடு என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. நம்முடைய வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்து கொண்டு நாளைய தினம் மாலையில் அந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும்பொழுது வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி சுகபோகமான வாழ்க்கையை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே கண் திருஷ்டி நீக்கும் முருகன் தீர்த்தம்
ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை ஸ்ரீ சக்கரத்தை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அம்மனின் அருளால் சுகபோகமான வாழ்க்கை ஏற்படும். நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து பலனடையுங்கள்.