ஆடி மாதத்தில் அனைவரும் அம்மனை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அதிலும் குறிப்பாக ஆடி வெள்ளி என்பது ஒவ்வொரு அம்மன் ஆலயங்களிலும் மிகவும் விசேஷமாக இருக்கும். அப்படிப்பட்ட விசேஷமான ஆடி வெள்ளி என்பது ஆலயத்தில் மட்டுமல்ல நம்மை போல் இருக்கக்கூடிய அனைவரின் இல்லங்களிலும் சிறப்பாகவே அமையும். பலரும் இந்த ஆடி வெள்ளி சமயத்தில் தங்களுடைய வீட்டில் தங்களுக்கு தெரிந்த முறையில் பூஜைகள் செய்து அம்மனை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அந்த வகையில் மிகவும் எளிமையாக வீட்டிலேயே விளக்கு பூஜை செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆடி முதல் வெள்ளி பூஜை
அம்மனுக்கு உகந்த பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒரு பொருள் என்றால் அதுதான் திருவிளக்கு. விளக்கில் மூன்று தேவியரும் குடியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விளக்கை நாம் முப்பெரும் தேவிகளாக பாவித்து வழிபாடு செய்யும்பொழுது நமக்கு மூன்று தேவிகளின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட திருவிளக்கை வைத்து நாம் ஆடி வெள்ளி அன்று பூஜை செய்யும் பொழுது முப்பெரும் தேவியரையும் பூஜை செய்த பாக்கியத்தை பெற முடியும். அதோடு ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பது அஷ்டமி திதியோடு சேர்ந்து வருகிறது. இது இன்னும் கூடுதல் சிறப்பை தரும். அதனால் இந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு கால பைரவரின் அருளையும் சேர்த்துப் பெற வைக்கும்.
வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் இருக்கிறது என்று நினைப்பவர்கள் இந்த விளக்கு பூஜையை ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை வரக்கூடிய ராகு காலமான 10:30 மணியில் இருந்து 12 மணிக்குள் செய்ய வேண்டும். மற்றவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம். காலை 6 மணியிலிருந்து 10:15 மணி வரை செய்யலாம். மதியம் 12:15ல் இருந்து 1 15 வரை செய்யலாம் அல்லது மாலை 6:30 மணியிலிருந்து 9:30 மணி வரை செய்யலாம். இதற்கு நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு விளக்கை பிரதான விளக்காக தேர்வு செய்து ஒரு மனைப்பலகை வைத்து அதற்கு மேல் பச்சரிசி பரப்பி அதற்கு மேல் அந்த விளக்கை வைக்க வேண்டும். ஒரு தாம்பாள தட்டில் கூட பச்சரிசியை பரப்பி அதற்கு மேல் வைக்கலாம்.
இந்த விளக்கிற்கு வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இந்த விளக்கை சுற்றி எட்டு அகல் விளக்குகளை வைத்து அதற்கும் மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இந்த விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக்கொள்ள வேண்டும் இந்த தீபம் அனைத்தும் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த பூஜையை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் நிலை வாசலிலும் மஞ்சள் குங்குமம் வைத்திருக்க வேண்டும். இந்த திருவிளக்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து அதில் சர்க்கரை பொங்கல், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய், பால் பாயாசம், இனிப்பு வகைகள் என்று நம்மால் எந்த அளவிற்கு சிறப்பாக நெய்வேத்தியம் வைக்க முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பான நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும்.
பிறகு பிரதானமாக வைத்திருந்த விளக்கு இருக்கிறது அல்லவா? அந்த விளக்கிற்கு முன்பாக ஒரு சிறிய தட்டை வைத்துக்கொண்டு அர்ச்சனை செய்ய ஆரம்பிப்போம். முதலில் திருவிளக்கு பூஜை செய்வதற்கு விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். “ஓம் கணேசாய போற்றி” என்னும் மந்திரத்தை 11 முறை கூறி விநாயகப் பெருமானை வழிபாடு செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக வாசனை மிகுந்த தாழம்பூக் குங்குமத்தை எடுத்து “ஓம் சக்தி ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி பிரதான விளக்குக்கு முன்பாக இருந்த தட்டில் குங்குமத்தை வைத்த அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அன்றைய தினம் அஷ்டமி திதி என்பதால் “ஓம் பைரவா போற்றி” என்னும் மந்திரத்தை 21 முறை கூற வேண்டும்.
இவ்வாறு கூறி முடித்து அர்ச்சனை செய்த பிறகு வீடு முழுவதும் கற்பூர தீப தூப ஆராத்தி காட்ட வேண்டும். சாம்பிராணி தூபத்தை நிலை வாசலுக்கு காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: செல்வநிலையை உயர்த்தும் தேங்காய் வழிபாடு
இந்த முறையில் நாம் ஆடி முதல் வெள்ளி வீட்டில் விளக்கு பூஜை செய்வதன் மூலம் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற முடியும். தடைபட்ட சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.