வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலட்சுமிக்குரிய கிழமை என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது அனைத்து விதமான பெண் தெய்வங்களுக்கும் உகந்த நாளாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் பூஜையாக இருந்தாலும் அது அனைத்து பெண் தெய்வங்களுக்கும் உரியதாகவே கருதப்படும். சிறப்பு வாய்ந்த வெள்ளிக்கிழமை அன்று செல்வ நிலை உயர்வதற்காக செய்ய வேண்டிய ஒரு தேங்காய் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
செல்வநிலை உயர வழிபாடு
எந்த ஒரு தெய்வ வழிபாட்டை நாம் செய்வதாக இருந்தாலும் கண்டிப்பான முறையில் அந்த தெய்வத்திற்கு தேங்காயை சமர்ப்பணம் செய்வோம். தேங்காய் என்பது மிகவும் புனிதமான ஒன்றாகவே கருதப்படுகிறது. மேலும் இது சிவபெருமானுக்கு இணையாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட தேங்காயை பயன்படுத்தி நாம் எந்த ஒரு வழிபாட்டை செய்தாலும் பரிகாரத்தை செய்தாலும் அதற்கு பல மடங்கு பலம் கிடைக்கும் என்றும் நாம் வைத்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தேங்காயை வைத்து ஆடி வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை இப்பொழுது பார்ப்போம்.
இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரே ஒரு தேங்காய் வேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு தேங்காயை எடுத்து அதில் சிறிதளவு மட்டும் குடுமி இருப்பது போல் பார்த்துக் கொண்டு மீதம் இருக்கக்கூடிய குடுமி அணைத்தையும் எடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதை நல்ல தண்ணீரை ஊற்றி ஒருமுறை கழுவி விட்டு பிறகு பன்னீரை ஊற்றி நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். அடுத்ததாக சுத்தமான மஞ்சள் துளை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் சிறிது பச்சை கற்பூரம், ஜவ்வாதையும் சேர்த்து நன்றாக கலந்து பன்னிரு ஊற்றி குழைத்துக் கொள்ளுங்கள்.
குழைத்த இந்த மஞ்சளை உங்களுடைய மோதிர விரலால் எடுத்து ஸ்ரீம் என்று தேங்காயின் ஒரு பக்கம் எழுத வேண்டும். இதே போல் ஒரு கிண்ணத்தில் குங்குமத்தை போட்டு அதிலும் பச்சை கற்பூரம், ஜவ்வாது, பன்னீர் ஊற்றி நன்றாக கலந்து மோதிர விரலால் எடுத்து மற்றொரு பக்கத்திலும் ஸ்ரீம் என்று எழுத வேண்டும். இவ்வாறு நாம் இந்த தேங்காயில் மந்திரத்தை எழுதும் பொழுது மகாலட்சுமியின் மந்திரத்தை கூறிக் கொண்டே எழுத வேண்டும். அப்படி கூற வேண்டிய மந்திரம் “ஓம் ஸ்ரீம் மகாலக்ஷ்ம் யை ஸ்ரீம் நமஹ”. மந்திரத்தை எழுதி முடித்துவிட்டு அந்த தேங்காயை நம்முடைய வலது உள்ளங்கையில் வைத்து மகாலட்சுமி தாயாரை நினைத்துக் கொண்டு இதே மகாலட்சுமி மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.
பிறகு இந்த தேங்காயை ஒரு சிவப்பு நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து விடுங்கள். நெய்வேத்தியமாக கற்கண்டு, உலர் திராட்சை போன்றவற்றை வைக்கலாம். பிறகு கற்பூர தீப தூப ஆராத்தி அனைத்தையும் காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் தீபம் ஏற்றும் பொழுதும் இந்த மூட்டைக்கு கற்பூர தீப தூப ஆர்த்தி காட்டி அந்த மூட்டியை பிரித்து அதில் இருக்கக்கூடிய தேங்காயை எடுத்து இரண்டாக உடைத்து அதில் இருக்கக்கூடிய தண்ணீரை வீட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் தீர்த்தமாக தர வேண்டும். தேங்காயை நாம் எப்பொழுதும் போல் சமையலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: துன்பங்களை நீக்கும் ஆடி வெள்ளி வழிபாடு
இந்த முறையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாம் தேங்காயை வைத்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய மகாலட்சுமி தாயாரின் அருளால் நம்முடைய வறுமை முற்றிலும் நீங்கும் செல்வநிலை உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.