தீபம் இல்லாத வழிபாடு என்பது இருக்கவே முடியாது. எந்த வழிபாட்டை நாம் செய்வதாக இருந்தாலும் எந்த இடத்தில் செய்வதாக இருந்தாலும் எந்த தெய்வத்திற்கு செய்வதாக இருந்தாலும் கண்டிப்பான முறையில் அந்த தெய்வத்தை நினைத்து அந்த தெய்வத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துதான் வழிபாடு செய்வோம். தீபம் ஏற்றாமல் செய்யக்கூடிய வழிபாட்டிற்கு பலன் கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று என்று கூறப்படுகிறது.
எந்த அளவிற்கு நாம் தீபமேற்றி வழிபாடு செய்கிறோமோ அந்த தீப ஒளியில் தெய்வம் பிரகாசிக்கிறார்களோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாக திகழும் என்பதால் தான் தீப வழிபாட்டிற்கு நம்முடைய முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அப்படிப்பட்ட தீப வழிபாட்டை ஆடி கிருத்திகை அன்று எந்த முறையில் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆடி கிருத்திகை தீப வழிபாடு
பொதுவாகவே முருகப்பெருமானுக்கு உகந்த திதிகள், நட்சத்திரங்கள் வரும் சமயங்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. பலரும் கிருத்திகை, சஷ்டி போன்ற தினங்களில் முருகப் பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வார்கள். முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், சண்முக கவசம் போன்ற பாடல்களை பாடி வழிபாடு செய்வார்கள்.
ஒரு சிலர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ வீட்டிலேயே வழிபாடு செய்வார்கள். எப்படி செய்வதாக இருந்தாலும் முருகப்பெருமானுக்குரிய தினத்தில் முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்வது என்பது பல நன்மைகளை நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்தும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திர நாள் என்பது முருகப் பெருமானுக்கு மிகவும் விசேஷகரமான நாளாக திகழ்கிறது.
பலரும் அன்றைய தினம் காவடி எடுத்து முருகப் பெருமானின் ஆலயத்திற்கு செல்லும் வழக்கத்தில் இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக திருத்தணியில் ஆடி கிருத்திகை திருவிழா என்பது மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். இப்படி பல அற்புதங்கள் நிறைந்த ஆடி கிருத்திகை அன்று அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானுக்கு அபிஷேகத்திற்காக தங்களால் இயன்ற பொருட்களை வாங்கி தருவதும் வழிபாடு செய்வதும் சிறப்பு.
இன்னும் சிலரோ வீட்டிலேயே முருகப்பெருமானின் சிலை மற்றும் வேலிற்கு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து முருகப்பெருமானின் பாடல்களை பாடியும் வழிபாடு செய்வார்கள். இவ்வாறு நாம் வழிபாடு செய்யும்பொழுது முருகப்பெருமானுக்கு என்று தீபம் ஏற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக கார்த்திகை நட்சத்திர தினத்தன்று நாம் தீபம் ஏற்ற வேண்டுமென்றால் கண்டிப்பான முறையில் ஆறு என்ற எண்ணிக்கையில் தான் தீபமேற்ற வேண்டும்.
மேலும் அந்த தீபத்தை நட்சத்திர கோலம் வரைந்து அதில் சரவணபவ என்று எழுதி அதற்கு மேல் வைத்து தான் ஏற்ற வேண்டும் என்று நமக்கு தெரியும். அந்த தீபமானது மாவிளக்கு தீபமாக இருக்கும் பட்சத்தில் நமக்கு பலன்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. சிறிய மாவிளக்காக இருந்தாலும் பரவாயில்லை ஆறு மாவிளக்குகளை தயார் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதற்கு நடுவே சுத்தமான நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு நட்சத்திர கோலத்திற்கு மேலே வைத்து முருகப்பெருமானுக்கு முன்பாக தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த தீப வழிபாட்டை வீட்டிலேயும் செய்யலாம். கோவிலிலும் செய்யலாம். இப்படி வழிபாடு செய்து முருகப்பெருமானின் போற்றிகளை கூறுபவர்களுக்கு இருக்கக்கூடிய கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும் என்றும் மேலும் அவர்களை வாட்டி வதைக்க கூடிய நோய்களிலிருந்தும் விடுதலை அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க முருகன் வழிபாடு
முருகப்பெருமானை மனதார நினைத்து முருகப்பெருமானுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய நோய்களும் கடன்களும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.