நமக்கு வெளியில் சொல்ல முடியாத எவ்வளவோ கஷ்டங்கள் இருக்கிறது. அந்த கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்றால் இறைவனின் பாதங்களை பற்றி கொள்வது தான் ஒரே வழி. கலியுகத்தில் இருக்கும் கஷ்டங்களை உடனடியாக போக்கக்கூடிய கடவுள் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபாடு செய்யக் கூடிய ஒரு முக்கியமான நாள் என்றால் அது இந்த ஆடி கிருத்திகையை சொல்லலாம்.
குழந்தை பாக்கியம் வேண்டும், திருமணம் நடக்கவில்லை, திருமணம் நடந்தும் குடும்பத்தில் குழப்பம் இருக்கிறது, கணவருக்கு வருமானம் இல்லை, நல்ல வேலை இல்லை, கடன் சுமை, இப்படி எத்தனையோ பிரச்சனைகள் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கிறது. அந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாக வேண்டும் என்று நாளைய தினம் முருகப்பெருமானிடம் மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.
விரதம் இருக்க முடியும் என்று நினைப்பவர்கள், விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்தால் நிச்சயம் உங்கள் பிரார்த்தனை பலிக்கும். நம்மை நாமே வருத்திக்கொண்டு, ஒருநாள் முருகப் பெருமானுக்காக விரதம் இருக்கும்போது அந்த விரதத்திற்கு உண்டான பலன் நிச்சயம் கிடைக்கும். நமக்கு நாமே வருத்தத்தை கொடுத்துக் கொள்ளும் போது, கர்மவினைகள் தானாக குறையும். அப்போது நமக்கு வரக்கூடிய பிரச்சனைகள் தானாக குறையும். இதுதான் வழிபாட்டிலும் விரத முறைகளிலும் மறைந்திருக்கும் சூட்சுமம்.
29-7-2024 அன்று ஆடிக் கிருத்திகை அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து, பின் சொல்லி கூடிய முறையில் உங்களுடைய பிரார்த்தனையை செய்யுங்கள். நிச்சயம் அந்தப் பிரார்த்தனை கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும்.
முருகப்பெருமான் என்றால் நம் நினைவுக்கு முதலில் வருவது கந்த சஷ்டி கவசம். கடுமையான விரதம் பெரிய வேண்டுதல் இருக்கிறது என்பவர்கள் இந்த கந்த சஷ்டி கவசத்தை ஆடி கிருத்திகை அன்று 36 முறை படிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. 36 முறை இந்த கந்த சஷ்டி கவசத்தை நீங்கள் ஆடி கிருத்திகை அன்று படித்து விட்டால் உங்கள் கஷ்டம் அன்றோடு தீர்ந்தது என்று முடிவு கட்டிக் கொள்ளலாம்.
இன்றைய அவசர சூழ்நிலையில் இதெல்லாம் சாத்தியம் கிடையாது. கந்த சஷ்டி கவசத்தை ஒரு முறை படிப்பதே சிரமம் என்று நிச்சயம் நாம் எல்லாம் யோசிப்போம். இருந்தாலும் ஒரு முறையாவது அந்த கந்த சஷ்டி கவசத்தை நாளை படிக்க வேண்டும். முடியாதவர்கள் தொலைபேசியில், டிவியில் ஒலிக்க விட்டாவது ஒருமுறை கந்த சஷ்டி கவசத்தை காதால் கேளுங்கள் நிச்சயம் புண்ணியம் நல்லது.
இது தவிர சுலபமான மூன்று மந்திர வரிகளை இன்று நாம் பார்க்கப் போகின்றோம். முருகனுக்கு சக்தி வாய்ந்த வார்த்தைகள் இவை.
முருக மந்திரம்
ஓம் சரவணபவ !
வேலும் மயிலும் துணை !
சக்திவேல் காக்க !
இந்த மூன்று மந்திரத்தை 36 முறை எழுதினாலே கந்த சஷ்டி கவசத்தை 36 முறை உச்சரித்த பலன் உங்களுக்கு கிடைத்துவிடும். ஒரு கோடு போட்ட நோட்டு, கோடு போடாத நோட்டு ஏதோ ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். பேப்பர் கசங்கி இருக்கக் கூடாது பாத்துக்கோங்க. ஒரு சிவப்பு நிற பேனாவை எடுத்து அந்த நோட்டில் 36 முறை இந்த மந்திரத்தை எழுதுங்கள். 36 முறைக்கும் மேலே எத்தனை முறை எழுதினாலும் தவறு கிடையாது.
இதையும் படிக்கலாமே: ஆடிக் கிருத்திகை அன்று படிக்க வேண்டிய வேல்மாறல்
ஆனால் கட்டாயம் 36 முறை எழுதும் படி பார்த்துக் கொள்ளுங்கள். முருகப்பெருமானை நினைத்து நாளைய தினம் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு உங்கள் கஷ்டம் தீர வேண்டும் என்று இந்த எளிமையான மந்திரத்தை எழுதினாலே போதும். உங்களுக்கு வேண்டிய வரத்தை அந்த முருகப்பெருமான் கொடுத்துவிடுவான். நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.