அஹோபிலம் லட்சுமி நரசிம்மர் ஸ்வாமி திருக்கோயில் சிறப்புக்கள்

lakshmi-narasimmar
- Advertisement -

உலகில் இருக்கும் அனைத்தும் இறைவனின் படைப்புகள் என்பது ஆத்திகவாதிகளின் எண்ணமாகும். அக்காலம் முதல் இக்காலம் வரை இறைவன் இருக்கிறாரா, இல்லையா என்கிற கேள்விகளும், ஆய்வுகளும் நடந்த படி உள்ளன. ஆனால் நமது வரலாறுகளில் தங்களின் அப்பழுக்கற்ற பக்தியால் இறைவன் அனைத்திலும் இருக்கிறார் என்று நிரூபித்த சத்திய சீலர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி “இறைவன் தூணிலும் உள்ளார், துரும்பிலும் உள்ளார்” என்று நிரூபித்த “அஹோபிலம் ஸ்ரீ பிரகலாத வரதன் லட்சுமி நரசிம்மர்” கோயில் சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Narasimmar

அஹோபில லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு

சுமார் 3000 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோயிலாக கருதப்படுகிறது அஹோபில பிரகலாத வரதன் கோயில். “அஹோ” என்றால் “சிங்கம்” “பிலம்” என்றால் “குகை” சிங்கமான நரசிம்மரின் குகை என இதற்கு பொருள். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில் இது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும் இந்த அஹோபில லட்சுமி நரசிம்மர் கோயில்.

- Advertisement -

அஹோபில கோயில் கருடாத்திரி என்கிற மலையில் மலையடிவாரம் முதல் மலை உச்சி வரை மொத்தம் 9 விதமான நரசிம்மரின் ரூபங்கள் கொண்ட கோயில்கள் இருக்கின்றன. கோயிலின் இறைவனான பெருமாள் தனது நான்காவது அவதாரமான நரசிம்மர் அவதாரத்தில் கோயில் கொண்டிருகிறார். இக்கோயிலின் மூலவர் பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன் என்றும், தாயார் அமிர்தவல்லி செஞ்சுலட்சுமி ஆகியபெயர்களில் அழைக்கபடுகிறார்கள். மலையடிவாரம் முதல் மலை உச்சி வரை மொத்தம் 10 கிலோமீட்டர் தொலைவில் மலை மற்றும் அடர்ந்த வனம் சார்ந்த இடங்களில் அனைத்து கோயில்களும் இருக்கின்றன.

narasimha avadharam

கோயில் புராணங்களின் படி இந்த பகுதியில் தான் அரக்கர் குல வேந்தனான இரண்யகசிபு ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான் என்றும், அவனது மகனும், பெருமாள் பக்தருமான பிரகலாதன் இறைவனான நாராயணன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என இரண்யகசிபுவிடம் கூறிய போது, அது உண்மையா என்று சோதிக்க இரண்யகசிபு தனது அரண்மனையின் தூண் ஒன்றை பிளக்க, அதிலிருந்து நரசிம்ம மூர்த்தியாய் வெளிப்பட்ட பெருமாள் இரண்யகசிபுவை வதம் செய்து, தனது பக்தன் பிரகலாதனுக்கு அருள்புரிந்தார்.

- Advertisement -

இரண்யகசிபுவின் அரண்மனை தற்போது காடுகளாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது. நரசிம்ம அவதாரத்தை காண விரும்பிய கருடாழ்வார் இம்மலையில் கடுந்தவம் இயற்றினார். அவரது தவத்தை மெச்சிய பெருமாள் அஹோபில மலை உச்சியில் தனது நரசிம்மர் அவதார தரிசனத்தை தந்தருளினார். கருடாழ்வார் தவமிருந்த மலை என்பதால் இது கருட மலை என்று பொருள்படும் கருடாத்திரி என்கிற பெயர் பெற்றது.

அஹோபில லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் சிறப்புக்கள்

- Advertisement -

இந்த அஹோபில கோயில் மலை அடிவாரம் முதல் மலை உச்சி வரை மொத்தம் 9 நரசிம்மர் கோயில்களை கொண்டிருக்கின்றன. அவை நவகிரகங்கள் அம்சம் கொண்ட கோயில்களாக இருக்கின்றன அவை
1. பார்கவ நரசிம்மர் – சூரியன்
2. காரஞ்ச நரசிம்மர் – சந்திரன்
3. ஜுவாலா நரசிம்மர் – செவ்வாய்
4. பாவன நரசிம்மர் – புதன்
5. அஹோபில நரசிம்மர் – குரு
6. மாலோல நரசிம்மர் – சுக்கிரன்
7. யோகானந்த நரசிம்மர் – சனி
8. வராக (குரோத) நரசிம்மர் – ராகு
9. சக்ரவட நரசிம்மர் – கேது
ஆகிய இந்த ஒன்பது கோயில்களிலும் வழிபடுபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் நீங்குவதோடு, கிரக பெயர்ச்சிகளால் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும்.

இங்குள்ள மலையில் பாபநாசினி நீர்வீழ்ச்சி இருக்கிறது. காடு, மலைகள் சார்ந்த இடங்களில் இந்த 9 நரசிம்மர் கோயில்களும் உள்ளன. மாலோல நரசிம்மர் கோயிலிலிருந்து 3 கி. மீ தொலைவில் நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்ட இடமும், அந்த தூணும் இருப்பதாக கூறப்படுகிறது. மலையடிவார நரசிம்மர் கோயிலில் 85 ஆதி உயரமுள்ள ஜெயஸ்தம்பம் எனப்படும் ஒரு மிகப்பெரிய தூண், பூமியில் 30 அடி ஆழம் தோண்டப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த தூணின் முன்பாக நின்று வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் எத்தகைய நியாயமான கோரிக்கைகளும் சீக்கிரத்தில் நிறைவேறுவதாக கூறுகிறார்கள்.

narasima vadham

தென்னிதிந்தியாவில் இருக்கும் வைணவ கோயில்களை நிர்வகிக்கும் தலைமை வைணவ பீடம் மற்றும் மடம் இந்த அஹோபில மடம் தான். தற்போது ஸ்ரீ நாராயண யதேந்திர மகா தேசிகன் ஸ்வாமிகள் இம்மடத்தின் 45 ஆவது பீடாதிபதியாக இருக்கிறார். ஆதிசங்கரர் இந்த அஹோபில கோயிலுக்கு வருகை தரும் போது அவரது உயிருக்கு ஆபத்து இருந்ததாகவும், ஸ்ரீ நரசிம்மரே அவரை அத்தனை ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.

பில்லி, சூனியம், செய்வினை, தீய ஆவிகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை இக்கோயிலுக்கு அழைத்து வந்து நரசிம்மரின் தீர்த்தத்தை அவர்களின் முகத்தில் தெளிக்க, அவர்களை பீடித்திருக்கும் எத்தகைய துஷ்ட சக்திகளும் நீங்கும். எதிரிகளால் தங்கள் தொழில், வியாபாரம், உயிர் போன்றவற்றிற்கு ஆபத்து இருப்பதாக நினைப்பவர்கள் இங்கு வந்து நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் அனைத்து எதிரிகளும் ஒழிவர். எப்படி பட்ட கடன்களையும் வெகு விரைவில் அடைக்க கூடிய ஆற்றலை லட்சுமி நரசிம்மர் தனது பக்தர்களுக்கு அருளுகிறார்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில், ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் அஹோபிலம் என்கிற ஊரில் அமைந்திருக்கிறது. இந்த ஊருக்கு ஆந்திர மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் போக்குவரத்து வசதிகள் உள்ளன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

இந்த அஹோபில கோயில்களில் மலையடிவாரத்தில் இருக்கும் கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும். மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கிறது. மலை மீதிருக்கும் கோயில்களில் காலை காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடை திறந்திருக்கிறது.

கோயில் முகவரி

ஸ்ரீ பிரகலாத வரதன்(லட்சுமி நரசிம்மர்) கோயில்
அஹோபிலம்
கர்னூல் மாவட்டம் – 518545
ஆந்திர பிரதேசம்

தொலைபேசி எண்

8519 – 252025

இதையும் படிக்கலாமே:
பரவை சந்தன மாரியம்மன் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ahobilam temple history in Tamil. It is also called Ahobilam narasimhar koil in Tamil or Ahobilam narasimha swamy temple in Tamil or Ahobilam madam in Tamil or Ahobilam narasimhar in Tamil.

- Advertisement -