ஃப்ரிட்ஜில் இட்லி தோசை மாவு இல்லையா? 1 கப் ரவை இருந்தால் போதும். அவசரத்திற்கு ஐந்தே நிமிடத்தில் அமலாபுரம் அடை தோசை தயார்.

adai_tamil
- Advertisement -

அரிசி பருப்பு ஊறவைத்து அதன் பின்பு அரைத்து கஷ்டப்பட்டு அடை தோசை சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இனி கிடையாது. உங்களுடைய வீட்டில் ஒரு கப் ரவை இருக்கா. அதை வைத்து அதனுடன் இன்னும் ஒரு சில பொருட்களை சேர்த்து அருமையாக இந்த அடையை சுட்டு சாப்பிடலாம். இந்த அடைக்கு பெரியதாக தொட்டுக்கொள்ள சைடு டிஷ் கூட தேவை கிடையாது. நாட்டு சர்க்கரை அல்லது தேன் வைத்து சாப்பிட்டாலும் இது அவ்வளவு சுவை கொடுக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அருமையான இந்த அடை ரெசிபியை எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம். இது ஆந்திர பக்கத்தில் பிரபல்யமாக செய்யக்கூடிய ரெசிபி அமலாபுரம் அடை என்று சொல்லுவார்கள்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரவை – 1 கப், அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், புளித்த தயிர் கெட்டியானது – 1/4 கப், உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 2, சீரகம் – 1/2 ஸ்பூன், இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை பொடியாக நறுக்கியது – 1 கொத்து, தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், கேரட் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி தழை சிறிதளவு பொடியாக நறுக்கியது, அவ்வளவுதான் இந்த பொருட்களை எல்லாம் போட்டு உங்கள் கையை கொண்டு மாவை நன்றாக பிசைந்து கொடுங்கள். (உங்களுக்கு பீட்ரூட் பிடிக்கும் என்றால் அதுவும் இரண்டு டேபிள் ஸ்பூன் துருவி இதில் போட்டுக் கொள்ளலாம்.) நாம் ஊற்றி இருக்கக்கூடிய தயிர் மட்டும் அடை மாவுக்கு போதாது.

- Advertisement -

கொஞ்சமாக தண்ணீரை தெளித்து இந்த மாவை உங்கள் கையை கொண்டு பிசைய வேண்டும். மாவு அடை மாவு பதத்திற்கு கொஞ்சம் கட்டியாக தான் இருக்க வேண்டும். கரைத்த இந்த மாவை ஒரு மூடி போட்டு 10 லிருந்து 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். தண்ணீரை, ரவை உறிஞ்சி மாவு இன்னும் கொஞ்சம் கெட்டியாகிவிட்டால் அதில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கூட கரைத்து கொள்ளலாம். தவறு கிடையாது. (மாவு ரொம்பவும் தண்ணியாக இருக்க கூடாது. கட்டியாக மாவை அப்படியே அள்ளி தோசை கல்லில் வைத்து, அடை வார்க்க வேண்டும்.)

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அது சூடானதும் எண்ணெய் ஊற்றி துடைத்துவிட்டு, அதில் இந்த அடையை வார்க்க வேண்டும். அடை மாவை ஊற்றி லேசாக கரண்டியால் தள்ளி விடுங்கள். மெலிசான தோசை போல எல்லாம் தீட்ட முடியாது. வட்ட வடிவில் இந்த மாவின் நகர்த்தி விட்டுவிட்டு, தேவைப்பட்டால் நடுவில் சிறிய ஓட்டை போட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மேலே ஒரு மூடி போட்டு மிதமான தீயில் அடையை வேக வையுங்கள். ஒரு பக்கம் வெந்ததும் மீண்டும் இன்னொரு பக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக சிவக்க விட்டு, சுட சுட எடுத்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். இதை சுட்டெடுக்கும் போதே நல்ல வாசமான மனம் வீசும்.

- Advertisement -

காரசாரமான புதினா சட்னி, தக்காளி சட்னி, என்று இதற்கு சைட் டிஷ் பரிமாறலாம். தேங்காய் சட்னியும் வைத்துக் கொள்ளலாம். எதுவுமே இல்லை என்றால் வெறும் தேன் வெல்லம் சேர்த்து கூட சாப்பிடலாம். இந்த அடையை சுட்டு முடித்துவிட்டு, அடை சூடாக இருக்கும் போதே மேலே சுட சுட வெண்ணையை தடவி அதன் மேலே நாட்டுச் சர்க்கரையை தூவி குழந்தைகளுக்கு கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

இனி அருமையான அடை சாப்பிட வேண்டும் என்றால் அரிசி பருப்பு வகைகளை ஊற வைத்து அரைத்து கஷ்டப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை தானே. அவசரத்துக்கு இந்த அமலாபுரம் அடையும் கைகொடுக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -